Published : 11 Dec 2019 01:09 PM
Last Updated : 11 Dec 2019 01:09 PM
சென்னை தி.நகரில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 7-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வேளச்சேரியில் இருந்து மாம்பலம் நோக்கி இன்று காலை மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாலும், பேருந்தை விட்டால் நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்ல முடியாது என்பதாலும், பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
இறுதியாக பேருந்து தி.நகர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தபோது மாணவர்கள் படிக்கட்டுகளில் இருந்து ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். அப்போது அவர்களுடன் குதித்த பள்ளி மாணவர் ஒருவர் தவறி விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். இதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் காட்சியைப் பார்த்து அருகில் உள்ள பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பேருந்து ஓட்டுநர் திருஞானசம்பந்தம் ( 38) பேருந்தை உடனடியாக நிறுத்தினார். உயிரிழந்த பள்ளி மாணவர் குறித்து சக மாணவர்களிடம் அருகில் உள்ளவர்கள் விசாரித்தபோது அவர் பனகல் பார்க் அருகே உள்ள ஒரு பள்ளியில் 7-வது படித்து வந்த மாணவர் என்பதும், அவர் பெயர் சரண் (12) என்பதும் தெரியவந்தது.
வேளச்சேரி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் குமார் என்பவர் மகன் மாணவர் சரண். வேளச்சேரியிலிருந்து தினமும் பேருந்து மூலம் தி.நகருக்குப் பள்ளிக்கு வருவது வழக்கம். இன்று படிக்கட்டின் முன்பக்கத்தில் இருந்து இறங்கும்போது பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாண்டிபஜார் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் ஆதம்பாக்கம் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் திருஞானசம்பந்தத்தைக் கைது செய்தனர். சிறுவன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பள்ளி நேரத்தில் , பீக் அவர்களில் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பெற்றோரின் அங்குள்ள பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரம் பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வலியுறுத்துவதும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பெற்றோர், போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கையில் உள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT