Published : 07 Dec 2019 05:36 PM
Last Updated : 07 Dec 2019 05:36 PM
குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படம் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த 3000 பேர் லிஸ்ட் தயாராகியுள்ளது. மாவட்ட வாரியாக பிரித்தப்பின் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைப்போம், போனில் அழைத்து மிரட்டுவதையெல்லாம் நம்பவேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் ஆபாசப்படங்கள் பார்க்கிறார்கள் என்கிற தகவலுடன் லிஸ்ட்டை எஃப்.பி.ஐ மத்திய உள்துறைக்கு அனுப்ப அதில் தமிழகத்தைச் சேர்ந்த 5000 பேர் லிஸ்ட், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒப்புக்கொண்ட கூடுதல் டிஜிபி ரவி விரைவில் நடவடிக்கை வரும் எனத் தெரிவித்திருந்தார்.
ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல, ஆனால் குழந்தைகளைப்பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படத்தை பார்ப்பது குற்றம். தற்போது வந்துள்ள லிஸ்ட் இந்தியாவில், தமிழகத்தில் இதுபோன்று குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் பட்டியல் ஆகும்.
இந்த லிஸ்டில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தத்தனிப்படை ஐபி அட்ரஸை வைத்து யார் யார் என்றெல்லாம் பார்த்தார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து விரைவில் நடவடிக்கை வர உள்ளது. இதில் குழந்தைகளுக்கான ஆபாசப்படம் பார்த்தவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் சிக்குகிறார்கள்.
குழந்தைகள் என்றால் 18 வயதுக்கு கீழுள்ளவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படங்களை பார்ப்பதோ, அதை ஷேர் செய்வதோ, டவுன்லோட் செய்வதோ, அப்லோட் செய்வதோ சட்டப்படி குற்றம். அதற்கு போக்சோ சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை வரும். 3 முதல் 8 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.
குழந்தைகள் நடிக்கும் ஆபாசப்படம் பார்ப்பது சட்டப்படி நடவடிக்கைக்குரியது. வந்தது பார்த்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. பார்த்தாலும் குற்றமே. ஐடி சட்டம் 67-ன்படி குற்றமே.
தற்போது இந்த விவகாரம் பரபரப்பாக உள்ள நிலையில் அனைவரும் ஒருவித பயத்தில் இருக்க காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு, போலீஸார் பேசுவதுபோன்று தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
பின்னணியில் வாக்கி டாக்கி ஒலியுடன் பேசும் நபர் போலீஸ்போல் மிரட்டி அப்பா நம்பரை கேட்கிறார். நாளை உன் அப்பா நம்பருக்கு போன் வரும். இவ்வாறு மிரட்டுவது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, 3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப் படுவார்கள் என்றும், இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT