Published : 07 Dec 2019 01:48 PM
Last Updated : 07 Dec 2019 01:48 PM
பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மிகுந்த அக்கறையுடன் பல காரியங்களைச் செய்து வருகிறது அதில் விழிப்புணர்வூட்டும் காவலன் செயலி ஒன்று. அதன் செயல்பாடு பரவலாக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகரில் காவலன் செயலி மூலம் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.
காவலன் செயலியை பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறை உருவாக்கியுள்ளது. செல்போனில் பயன்படுத்தப்படும் இந்தச் செயலியில் உள்ள பட்டனை ஆபத்தில் இருக்கும் பெண்கள் அழுத்திய 15 நொடிகளில் காவல் கட்டுப்பாட்டறை, அருகில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் மெசேஜ் சென்று உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குக் காவலர்கள் வந்துவிடுவார்கள்.
இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்பட்டுள்ள நிலையில் காவலன் செயலி மூலம் ஆர்.கே.நகரில் 2 பேர் பிடிபட்டனர். சென்னை ஆர்.கே. நகர், ஆஸ்வல் கார்டன், சிபி சாலையில் வசிப்பவர் ப்ரீத்தி. இவரும் இவரது மாமியாரும் மட்டும் தனியாக வீட்டிலிருந்த நிலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் 2 நபர்கள் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அவர்களை யார் என ப்ரீத்தியும் அவரது மாமியாரும் கேட்டனர். நாங்கள் கொரியர் கம்பெனியிலிருந்து வருகிறோம் என்று அவர்கள் கூறி, வீட்டுக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ப்ரீத்தியின் மாமியார், காவல் ஆணையர் பேட்டியில் தெரிவித்திருந்த காவலன் செயலி பற்றி ஞாபகம் வர, தனது செல்போனில் அதை டவுன்லோடு செய்து வைத்திருந்தார்.
அதை எடுத்து அதில் உள்ள எஸ்.ஓ.எஸ் பட்டனை அழுத்த சற்று நேரத்தில் அங்கு ஆர்.கே. நகர் காவல் ஆய்வாளர் போலீஸாருடன் வந்தார். இதற்கு 6 நிமிடங்கள் மட்டுமே ஆனது. அங்கு வந்த போலீஸார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சலீம் (41), தாவூத் (38) எனத் தெரியவந்தது. அவர்கள் கொரியர் பாய் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
காவலன் செயலி மூலம் முதன்முறையாக கைதானவர்கள் இவர்கள் எனத் தெரிகிறது. காவலன் செயலியை அறிமுகப்படுத்தியதன் மூலம் பெண்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது எனப் புகார் அளித்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT