Published : 06 Dec 2019 06:55 PM
Last Updated : 06 Dec 2019 06:55 PM

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் கைப்பை பறிப்பு; கீழே விழுந்து படுகாயம்: சிகிச்சை பலனின்றி பலி

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் கைப்பையை பைக்கில் வந்த நபர் பறித்துச் சென்றதில் படுகாயமடைந்த பெண் கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பாரதி நகர், நம்மாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (54). இவரது மனைவி முருகலட்சுமி (49) கேட்ரிங் தொழில் செய்துவந்தார்.

கடந்த 22-ம் தேதி மாலை மகன் சண்முக சுந்தரத்துடன் மோட்டார் பைக்கில் வேளச்சேரி செல்வதற்காக பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

கையில் கைப்பை வைத்திருந்தார். இரவு 7 மணி அளவில் பள்ளிக்கரணை பாலாஜி பல் மருத்துவமனை அருகே வரும்போது பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணிந்து பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், திடீரென அவரது கையிலிருந்த கைப்பையை வேகமாகப் பறித்துக் கொண்டு பறந்தார். இதில் நிலைகுலைந்த முருகலட்சுமி ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்தார்.

திடீரென தனது தாயார் சாலையில் விழுந்ததைப் பார்த்து அவரது மகன் சண்முகசுந்தரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரைத் தூக்கினார். முகத்தில் பலத்த காயம் அடைந்த முருகலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். பையைப் பறித்து கீழே விழக் காரணமாக இருந்த வழிப்பறி நபர் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மறைந்துவிட்டார்.

காயத்துடன் கிடந்த முருகலட்சுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் முருகலட்சுமி உயிரிழந்தார்.

ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து ஐபிசி பிரிவு 394 (வழிப்பறி , திருட்டு சம்பவத்தில் எதிராளிக்குக் காயம் விளைவித்தல்) 511 (ஒரு குற்றம் புரிவதற்காக செய்யப்பட்டது என ஒரு வழக்கில் கூடுதலாக தண்டனையை இப்பிரிவின் மூலம் வழங்கலாம்) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி நபரைத் தேடி வந்ததனர்.

முருகலட்சுமியின் மரணத்துக்குக் காரணமான மோட்டார் பைக் நபரை பள்ளிக்கரணை போலீஸார் இதுவரை பிடிக்கவில்லை. முருகலட்சுமி தற்போது உயிரிழந்த நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற போலீஸார் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x