Published : 05 Dec 2019 02:16 PM
Last Updated : 05 Dec 2019 02:16 PM
நண்பரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 குற்றவாளிகளில் இருவர் உயிரிழந்த நிலையில், 21 வயதில் தலைமறைவானவர் இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு 42 வயதில் சிக்கினார்.
1999-ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கொலை முயற்சியில் முடிந்தது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வசித்தவர் மணிகண்டன்(20). இவர் கடந்த 1999-ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டி தெருவில் உள்ள முருகன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோ மெக்கானிக் கடையில் பணி புரிந்தார்.
அவருடன் ராமலிங்கம் (எ) ராமு(21), விஜி(22), ஆரோக்கிய தாஸ்(24) ஆகியோர் மெக்கானிக்குகளாக பணிபுரிந்துள்ளனர். நால்வரும் நல்ல நண்பர்கள். எங்கு போனாலும் ஒன்றாகச் செல்வார்கள். சேர்ந்தே இருப்பார்கள். அதே ஆண்டு அக்டோபர் மாதம் , அவர்கள் முதலாளி முருகனுக்கு திருமணம் நடந்தது.
எல்லீஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. முதலாளியின் திருமணத்துக்கு மணிகண்டன், ராமு, விஜி, ஆரோக்கியதாஸ் 4 பேரும் சென்றனர். அதற்கு முன் நால்வரும் ஒன்றக மது அருந்தினர். பின்னர் திருமண விழாவில் மது போதையில் கலந்துக்கொண்டு விருந்து சாப்பிட்டனர்.
நண்பர்களுக்குள் ஜாலியாக கேலி கிண்டலுடன் பேசியுள்ளனர். இதில் மணிகண்டன் என்றால் மற்றவர்களுக்கு இளக்காரம், அவரை மட்டம் தட்டி பேசுவதுதான் அனைவரது வழக்கமும். அன்றும் அதேப்போன்று பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த மணிகண்டனுக்கும் மற்ற 3 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது நண்பர்கள் விஜி, ராமு, ஆரோக்கியதாஸ் ஆகிய 3 பேரையும் மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கடுமையான ஆத்திரமடைந்த அவர்கள் மணிகண்டனை கொல்லும் அளவுக்கு கோபத்தின் உச்சிக்கு சென்றனர்.
பின்னர் சமாதானம் ஆவதுபோல் காட்டிக்கொண்டு திருமண நிகழ்ச்சி முடிந்து 4 பேரும் சிந்தாதிரிப்பேட்டைக்கு திரும்பியுள்ளனர். வீட்டுக்குச் செல்லும் வழியில் மணிகண்டனை மூன்று பேரும் இரும்புக் கம்பி மற்றும் அரிவாளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் கடுமையான காயமடைந்த மணிகண்டன் அலறும் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். இதைக்கண்ட மூவரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்றார். தன்னை தாக்கிய நண்பர்கள்மீது மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் 1999-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி மூவர்மீதும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் ஐபிசி 341( செயல்பட விடாமல் தடுத்தல்), 506(ii)(ஆயுதத்துடன் கொலை மிரட்டல்) 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த மூவரையும் போலீசார் தேடிவந்தனர். விஜியும், ஆரோக்கியதாஸும் போலீஸார் தேடுவதை அறிந்து நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ராமு மட்டும் தலைமறைவானார். போலீஸார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். சில நாளில் ராமுவை பிடித்துவிடலாம் என போலீஸார் சாதாரணமாக நினைத்தனர். ஆனால் ராமு என்ன ஆனார் என்பதே தெரியாமல் போனது. சந்தனக்கடத்தல் வீரப்பன்கூட சிக்கினார் ராமு சிக்கவே இல்லை.
சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ரெக்கார்டில் தலைமறைவு குற்றவாளியாக கண்டுபிடிக்கப்படாத நபராக பல ஆண்டுகள் இருந்தார் ராமு. ஒருகட்டத்தில் வழக்கில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்த விஜி கடந்த 2011-ம் ஆண்டு இறந்து போனார். ஆரோக்கியதாஸ் 2017-ம் ஆண்டு இறந்து போனார். தாக்கப்பட்ட மணிகண்டனும் சிந்தாதிரிப்பேட்டையை காலி செய்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார்.
ஆனால் ராமு மட்டும் போலீஸ் கையில் சிக்காமலேயே இருந்தார். போலீஸாரும் முயற்சியை விடவே இல்லை, சமீபத்தில் ராமு பற்றி போலீஸாருக்கு ஒரு துப்பு கிடைத்தது. தி.நகரில் உள்ள மெத்தை தயாரிக்கும் டெய்லர் கடையில் ராமு வேலை செய்ததாக தகவல் வந்தவுடன் போலீஸார் அங்கு போய் நின்றனர்.
ஆனால் கிடைத்தது ஏமாற்றமே, 2011-ம் ஆண்டு வரை ராமு இங்கு வேலை செய்து வந்தார், அதன்பின்னர் வரவே இல்லை, என்ன ஆனார் என்று தெரியாது என்று அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். சோர்ந்து போனார்கள் போலீஸார். அப்போது சிலர் ராமுவின் உறவினர்கள் குறித்த தகவலைச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டபோது ராமு எங்கிருக்கிறார் என தெரியாது என நடித்துள்ளனர்.
ராமுவின் அண்ணன் இறந்துவிட்டப்பின் ராமு எங்கே போனான் என்று தெரியாது என்று கூறியுள்ளனர். அப்போதுதான் போலீஸாருக்கு பொறிதட்டியுள்ளது. அவர்களது உறவினர்களிடம் நாங்கள் இன்ஷுரன்ஸ் கம்பெனியில் இருந்து வருகிறோம். அவரது அண்ணன் இன்ஷுரன்ஸ் பணம் வந்துள்ளது, யாரிடம் கொடுப்பது என்று தெரியவில்லை ராமுவிடம் கொடுக்கலாம் என்றால் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என வலைவிரித்துள்ளனர்.
அதை நம்பிய உறவினர்கள் ராமு பாவம் கஷ்டப்படுகிறான், இங்குதான் பக்கத்தில் வேளச்சேரியில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறான் என அட்ரஸை தெரிவித்துள்ளனர். அப்புறம் என்ன சிட்டய் பறந்த போலீஸார் ராமுவை பிடித்து கைது செய்தனர்.
21 ஆண்டுகள் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டது போலீஸ் வரலாற்றில் சிலர்தான் என்கின்றனர். வீரப்பன்போல் போலீஸாருக்கு தண்ணீர் காட்டிய ராமுவுக்கு இன்ஷுரன்ஸ் பணம் என்று பொறி வைத்து பிடித்துள்ளனர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார்.
செகரடேரியட் காலனி கொலைக்குற்றவாளி தினேஷ்
இதேப்போன்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செகரெடேரியட் காலனியில் தினேஷ்குமார் என்கிற இளைஞர் தன் காதலி அருணாவைக் கொன்று கார் டிக்கியில் அடைத்து கொண்டுச் செல்லும்போது பொதுமக்கள் பார்த்து புகார் அளிக்க போலீஸ் கையில் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டார். கடந்த 5 ஆண்டுகளாக தினேஷ் இதுவரை பிடிபடாமல் இருக்கிறார். அவருக்கு குடும்பம் உள்ளது. இன்று சைபர் பிரிவு எவ்வளவோ வளர்ந்துவிட்டது ஆனாலும் அவர் பிடிபடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT