Published : 26 Nov 2019 07:27 PM
Last Updated : 26 Nov 2019 07:27 PM
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு பனவடலிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (34). இவரது மனைவி செல்வி (30).செல்வியின் சகோதரி ஜோதி (35).
இவர்கள் 3 பேரும் ஜவுளி வாங்குவதற்காக ஒரே இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவிலுக்குச் சென்றனர். பின்னர், இன்று மாலையில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தனர்.
திருநெல்வேலி- சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் தெற்கு பனவடலிசத்திரம் பகுதியில் வளைவான பகுதியில் திரும்பும்போது, இருசக்கர வாகனத்தின் மீது எதிரே திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பனவடலிசத்திரம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். மேலும், விபத்து குறித்து பனவடலிசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து:
மேலப்பாளையம் அமுதாபிட் நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் பெருமாள் (18). இவர், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரியில் வேலை பார்த்து வந்தார். இன்று மாலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம்- பாளையங்கோட்டை பேருந்து நிலையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
குலவணிகர்புரம் ரயில்வே கேட்டை கடந்து சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக தூத்துக்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT