Published : 26 Nov 2019 06:18 PM
Last Updated : 26 Nov 2019 06:18 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 500 பவுன் நகைகளுக்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை, வழிப்பறி, திருட்டு என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காரைக்குடியில் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா காதிநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அதிகாரி ஜெயராஜ் கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 143 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதேபோல் காரைக்குடி மகரநோன்பு பொட்டலைச் சேர்ந்த ஜவுளிகடை அதிபர் இளங்கோ மணி சில வாரங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றநிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 250 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டன.
அதே தினத்தில் சுப்பிரமணியபுரம் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த விஜயா என்பவரிடம் மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி 17 பவுன் நகைகளை பறித்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பெண்ணிடமிருந்தும் 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அந்த மர்மநபர் தப்பினார். சென்ற வாரம் என்ஜிஓ இபி காலனியைச் சேர்ந்த வயதான தம்பதியிடம் பத்தரை பவுன் சங்கிலியை மர்மநபர் ஒருவர் வயர்மேன் என கூறி பறித்து சென்றார்.
இதேபோல் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 500 பவுன் நகைகளுக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை ஒரு வழக்கில் கூட குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.
மேலும் கடந்த காலங்களை போல் இல்லாமல் தற்போது நகரில் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ளன. கொள்ளை வழக்குகளை பிடிப்பதற்காக ஒவ்வொரு காவல்நிலையத்திலும் தனியாக குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
இருந்தும் குற்றவாளிகளை பிடிக்க முடியாதநிலை உள்ளது. மேலும் கொள்ளைச் சம்பவங்களும் தொடர்வதால் காரைக்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த காலங்களில் குற்றப்பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த போலீஸாரை நியமித்து வந்தனர். ஆனால் தற்போது அந்தநிலை மாறிவிட்டது. யாரை வேண்டுமானாலும் நியமிக்கின்றனர். மேலும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு அடிக்கடி அரசியல் தலைவர்கள் வருகை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கோயில் விழாக்கள் என மாற்றுப் பணிகள் வழங்கப்படுகின்றன.
இதனால் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவல்களை சேகரிக்க முடியாமல் போய்விடுகிறது. கடைகள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள் வீடுகள் கூட பெரும்பாலானோர் சிசிடிவி கேமராக்கரை வைக்கவில்லை. இதுவும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமத்தை ஏற்படுத்துவதாக போலீஸார் புலம்புகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘ சில வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்,’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT