Published : 15 Nov 2019 06:02 PM
Last Updated : 15 Nov 2019 06:02 PM
திருநெல்வேலி
சிறார்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
கூட்டத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமீப காலங்களாக பள்ளிக் குழந்தைகள் ஐஸ்கிரீம், சாக்லேட் என பல்வேறு வடிவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதைத்தடுக்க சரியான வழிமுறைகள் இல்லை. திருச்சி மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் பள்ளி மாணவர்கள் வலி நிவாரணி மாத்திரை ஒன்றை நீரில் கரைத்து ஊசிகள் மூலம் உடலில் செலுத்தி போதைப்பொருளாக பயன்படுத்தியது தெரியவந்தது.
அந்த மாத்திரைகள் பெரும்பாலும் திருப்பூரில் இருந்து மொத்தமாக வருவதும் அவை ஒரு மாதத்தில் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதும் கண்டறியப்பட்டது.
வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் சேர்த்து பயன்படுத்தினால் கோக்கைன் போன்ற போதையைத் தரும். இந்த மாத்திரைகள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பட்டியலில் இந்த மாத்திரையை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம்.
கிராமப்புற மாணவர்களை குறிவைத்தே போதை தரக்கூடிய இதுபோன்ற மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் போதை மாத்திரைகள் எவ்வாறு வருகிறது என கண்டறிய காவல் துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு வகையான போதைப் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்தும் பலர் எச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், வட மாநிலம் ஒன்றில் ஊசி மூலம் போதைப் பொருள் பயன்படுத்துவது குறைந்தது.
போதைப் பொருட்களை பயன்படுத்தி சிறுவர்கள் தன்னிலையில் இல்லாமல் இருக்கும்போது அவர்களை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நன்றாக உள்ளது. பள்ளி கல்லூரிகள் முன்பு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக நேரடியாக ஆணையமே இங்கு வந்துள்ளது.
நாங்கள் இங்கு வந்திருப்பதால் ஏற்படும் விழிப்புணர்வால் போதைப்பொருள் பயன்பாடு குறையும். அதன்பிறகு காவல் துறை நடவடிக்கை மூலம் போதைப்பொருள் பயன்பாடு மேலும் குறையும். இந்தியா முழுவதும் 35 அமர்வுகளில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து 9,000 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 7,000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT