Published : 14 Nov 2019 12:20 PM
Last Updated : 14 Nov 2019 12:20 PM
திருநெல்வேலி
கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞரைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் காப்பாற்றினர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலக்கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். வயது 35. இவரது மனைவி மாரியம்மாள் வயது 28 இவர்களுக்கு இசக்கிராஜா வயது 7 சூரியபிரகாஷ் வயது 5 தனலட்சுமி வயது எட்டு ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
அருள்தாஸ் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ரூ 50,000 தனது பத்திரத்தை அடகு வைத்து கடன் வாங்கியதாகத் தெரிகிறது.
அந்த கடன் தொகைக்காக இதுவரை அவர் ரூ 2 லட்சம் வரை வட்டி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு லட்சம் கேட்டு அந்த நபர் அருள்தாஸ் வீடு புகுந்து தாக்கிய மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அருள்தாஸ் இன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தென்காசியை அடுத்த காசி தர்மத்தை சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்தனர். கந்துவட்டி கொடுமையால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டது பின்னர் தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னதாகவே ஆட்சியர் அலுவலகத்துக்குள் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கும் நிலை இருக்கிறது.
இருப்பினும் கெடுபிடிகளைத் தாண்டி மண்ணெண்ணெய் கேனை எப்படி உள்ளே கொண்டுவந்தனர் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT