Published : 11 Nov 2019 04:46 PM
Last Updated : 11 Nov 2019 04:46 PM
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல்- செந்தாமரை தம்பதி கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்துகொண்டு வந்த 2 பேர் அவர்களைத் தாக்கி, நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டிய வயதான தம்பதியை தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டி, ‘அதீத துணிவு’ விருது வழங்கி பாராட்டினார்.
இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். இந்நிலையில், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 2 பேரை கடையம் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பாலமுருகனின் தந்தை மாடசாமி இன்று (திங்கள்கிழமை) தனது மனைவி சவுரியம்மாள், மகள் முப்பிடாதி மற்றும் பாலமுருகனின் 2 மகள்களை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே இருந்தபோது, மாடசாமி, சவுரியம்மாள், முப்பிடாதி ஆகியோர் விஷம் குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து மாடசாமி கூறும்போது, “கடையம் தம்பதியிடம் கொள்ளை வழக்கில் எனது மகள் பாலமுருகனை போலீஸார் கைது செய்த பின்னர், விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கின்றனர். கேரளாவில் வேலை பார்த்த எனது மற்றொரு மகளையும் ஒரு வழக்கில் கைது செய்தனர். போலீஸ் தொந்தரவால் குடும்பத்துடன் விஷம் குடித்தோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT