Published : 05 Nov 2019 04:41 PM
Last Updated : 05 Nov 2019 04:41 PM
மதுரை
முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதாக நெல்லையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மீது திருநங்கை ஒருவர் புகார் கூறியிருக்கிறார்.
நெல்லை மாவட்டம், ராமச்சந்திரபட்டினத்தைச் சேர்ந்தவர் பபிதா ரோஸ். திருநங்கையான இவர், சமூக அறக்கட்டளை நடத்துகிறார். இவர், இன்று தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரனிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கும், நெல்லை அம்பாசமுத்திரம் காவல் நிலைய எஸ்.ஐயாக பணிபுரிந்த விஜய சண்முகநாதனுக்கும் கடந்த 2019 ஜன., 7-ல் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் திருமணம் நடந்தது. அவரது சகோதரி, சகோதரர் சங்கர் ஆகியோர் சம்மதத்தின் பேரிலேயே இத்திருமணம் நடந்தது.
தற்போது, அவர் நீலகிரியில் எஸ்.ஐ.யாக வேலை பார்க்கிறார். திருமணத்துக்கு பிறகு கணவன் மனைவியாக அம்பாசமுத்திரத்தில் வாழ்தோம். பொய்யான சில தகவல்களைச் சொல்லி விஜய சண்முகநாதன் என்னிடமிருந்து ரூ.20 லட்சம் பணம்,1 கிலோ தங்க நகைகளை வாங்கினார். கணவர் என்ற முறையில் நானும் கொடுத்தேன்.
இந்நிலையில் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், அதை மறைந்து, என்னை திருமணம் செய்து, ஏமாற்றியதும் தெரிந்தது.
இது தொடர்பாக பெரியவர்கள் முன்னிலையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் ரூ.4 லட்சத்தை திருப்பிக் கொடுத்தார். எஞ்சிய ரூ.16 லட்சம், நகைகளைத் தரவில்லை. இது பற்றி கேட்டபோது, அவரது நண்பர்கள், சேது, விஷ்ணு ஆகியோர் மூலம் கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இது குறித்து நெல்லை எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தேன். தாழையூத்து டிஎஸ்பி விசாரித்து, விஜயசண்முகநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார். ஆனாலும், அவர் மீது நடவடிக்கை இல்லை. எனக்குத் தரவேண்டிய ரூ. 16 லட்சம், ஒரு கிலோ தங்க நகைகளைத் தரவில்லை.
நெல்லை சரக டிஐஜியிடமும் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நெல்லை மாவட்ட காவல் துறையினர் விஜய சண்முகநாதனை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
என்னை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளைப் பறித்த விஜய சண்முகநாதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரிடமிருந்து எனது, நகை, பணத்தை மீட்டுத் தரவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT