உசிலம்பட்டி சிலிண்டர் விபத்தில் திடீர் திருப்பம்: மனைவி விட்டுச்சென்றதால் கணவர், மகள்களுடன் தற்கொலை செய்தது அம்பலம்

உசிலம்பட்டி சிலிண்டர் விபத்தில் திடீர் திருப்பம்: மனைவி விட்டுச்சென்றதால் கணவர், மகள்களுடன் தற்கொலை செய்தது அம்பலம்

Published on

மதுரை

உசிலம்பட்டி அருகே டீக்கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் மரணம் அடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக நடந்தது தற்கொலை என்பது தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா (40).

இவர், அதே ஊரில் வீட்டுடன் கூடிய டீக்கடை நடத்தினார். இவரது மனைவி சீதா. இவர்களுக்கு பிரதீபா(8), ஹேமலதா (6). ஆகிய இரு மகள்கள் இருந்தனர்.

மனைவி மீது கருப்பையாவுக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பும் வழக்கம்போல் இருவருக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சீதா கோபித்துக் கொண்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவேயில்லை.

கருப்பையா தனது இரு மகள்களையும் கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 1.50 மணிக்கு கருப்பையாவின் டீக்கடைக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.

சிமெண்ட சிலாப்கள் கூரையாக இருந்ததால் கடை, வீடு முழுவதும் தீ வேகமாக பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கருப்பையா, வீட்டுக்குள் இருந்த மகள் பிரதீபா ஆகியோர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், காயமடைந்த மற்றொரு மகளான ஹேமலதா உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸார் விசாரணையில், கருப்பையாவின் மனைவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞருக்கும் நட்பு இருந்துவந்ததாகவும். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டது கருப்பையாவுக்கு தெரியவந்ததால் மனமுடைந்து கருப்பையா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தனக்குப் பின் தனது மகள்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற வேதனையில் மகள்களுக்கும் சேர்த்து அவர் தீ வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in