Published : 29 Oct 2019 05:44 PM
Last Updated : 29 Oct 2019 05:44 PM
ஹைதராபாத்,
ஆண்கள் பலபேருடன் பழகியதைத் தட்டிக் கேட்ட தாய் ரஜிதாவை (38) மகள் கீர்த்தி ரெட்டி (19) கொலை செய்த சம்பவம் ஹைதராபாத் துவாரகா காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக மகள் கீர்த்தி ரெட்டி, அவரது ஆண் நண்பர் பால் ரெட்டி, இன்னொரு நண்பர் ஷஷி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
தாய் ரஜிதாவைக் கொலை செய்து உடலையும் மறைத்து தன் தந்தை ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஒரு குடிகாரர் என்றும் அவர் தன் தாயாரை குடித்து விட்டு அடித்து மிரட்டுவார் என்றும் இதனால் தாய் காணாமல் போயிருப்பதாக போலீஸையும் ஊரையும் திசைத் திருப்ப முயன்றார் கீர்த்தி ரெட்டி.
ஆனால் இவர் கூறிய பொய்யே இவருக்கு எதிராகத் திரும்பி ஒரு தாய்க்கு மகள் செய்யக் கூடாத கொடூரத்தை செய்த விவரங்கள் வெளியானது.
ஹயாத் நகர் போலீஸார் இது தொடர்பாகக் கூறும்போது, 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் கீர்த்தி ரெட்டி, ஆண் நண்பர் பால் ரெட்டி, இன்னொரு நண்பர் ஷஷி ஆகியோரை கைது செய்ததாகத் தெரிவித்தார்.
அக்.24ம் தேதியன்று கீர்த்தி ரெட்டியின் தந்தை ஸ்ரீநிவாஸ் ரெட்டி (லாரி ஓட்டுநர்) தனது துவாரகா காலனி வீட்டுக்கு வந்தார். ஆனால் வீடு பூட்டியிருந்ததையடுத்து மனைவி ரஜிதாவுக்கு தொலைபேசி செய்தார். ஆனால் மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உடனே மகள் கீர்த்தியை மொபைலில் தொடர்பு கொண்டார். ஆனால் தான் வைசாகில் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். உடனே தாயாரைக் காணவில்லை உடனே ஹைதராபாத் திரும்புமாறு கீர்த்தி ரெட்டிக்கு உத்தரவிட்டார். ஆனால் கீர்த்தி சனிக்கிழமையன்றுதான் திரும்பினார், பிறகு தாயாரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார், அதில்தான் தன் தந்தை ஒரு குடிகாரர், தாய் ரஜிதாவுடன் அடிக்கடி சண்டையிடுவார் என்று அளந்து விட்டிருக்கிறார்.
தந்தை ஸ்ரீநினிவாஸ் ரெட்டி, தன் மகள் வைசாக் சென்றது குறித்து துருவித் துருவி கேட்டுள்ளார். அதற்கு கீர்த்தி முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்க தந்தைக்கும் சந்தேகம் பிடித்துக் கொண்டது. ரஜிதா காணவில்லை என்பதை அறிந்த கீர்த்தியின் ஆண் நண்பர் பால் ரெட்டியின் தந்தை ரஜிதாவின் வீட்டுக்கு வந்தார். அதாவது ஸ்ரீநிவாசுக்கு உதவுவதற்காக அவர் வந்துள்ளார். இவர் கூறியதுதான் இந்த வழக்கில் திருப்பு முனையை ஏற்படுத்தியது, அதாவது வைசாகில் இருந்ததாக கீர்த்தி கூறியது பொய் என்று தெரியவந்தது, செவ்வாய் முதல் தன் வீட்டில்தான் கீர்த்தி இருந்தார் என்று அவர் குட்டை உடைத்தார்.
மகள் கீர்த்தி பொய் கூறியதை அடுத்து ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஹயாத் நகர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து கீர்த்தி ரெட்டியை போலீஸார் துருவித் துருவி விசாரித்ததில் தாயாரை தன் நண்பர் ஷஷியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அதாவது அக்.19ம் தேதி தாயார் ரஜிதா தன் மகள் கீர்த்தி ரெட்டியின் பல்வேறு ஆண் தொடர்புகளைக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பலமுறை அவர் கீர்த்தியை கண்டித்ததாகவும் தெரிகிறது, இதனால் ஆத்திரம் அடைந்த கீர்த்தி தன் நண்பர் ஷஷியுடன் சேர்ந்து அன்று இரவே தாய் ரஜிதா உறக்கத்தில் இருந்த போது புடவையால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். அக்.22 வரை கொல்லப்பட்ட உடலுடனே இவரும் ஷஷியும் இருந்துள்ளனர் என்றும் இருவரும் மிகவும் நெருக்கமாகவும் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உடல் துர்நாற்றம் எடுக்கத் தொடங்கியவுடன் ரஜிதாவின் உடலை ஷஷியின் காரில் எடுத்துச் சென்று தம்மலகுடா அருகே இருந்த ரயில்வே பாதையில் கொண்டு போட்டு விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது விபத்து போல அலிபி உருவாக்க முயற்சி செய்தனர்.
இதோடு இல்லாமல் பால் ரெட்டியின் தந்தையை தொலைபேசியில் அழைத்து ரஜிதா போலவே பேசி ரஜிதாவும் ஸ்ரீநிவாச ரெட்டியும் மருத்துவமனையில் இருப்பதாகவும் தாங்கள் திரும்பி வரும் வரை கீர்த்தி அவர்கள் வீட்டில் இருக்கட்டும் என்றும் கூறியதாகவும் ஒரு அலிபியை உருவாக்க முயற்சித்துள்ளார். இந்த சமயத்தில்தான் வைசாகில் இருப்பதாக தந்தையை திசைத் திருப்பியுள்ளார் கீர்த்தி, ஆனால் அவரது மொபைல் எண்களை சோதனை செய்த போது ஹயாத் நகரில் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் ரயில்வே ட்ராக்கில் பெண் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ரயில்வே போலீஸிடமிருந்து தகவல் வந்தது. அவர்கள் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து ரஜிதாவின் உடலை புதைத்துள்ளனர்.
இந்நிலையில் கீர்த்தி, பால் ரெட்டி, ஷஷி ஆகியோரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT