Published : 25 Oct 2019 03:40 PM
Last Updated : 25 Oct 2019 03:40 PM
திண்டுக்கல்
சங்கிலியைப் பறித்த திருடனுடன் போராடி போலீஸில் ஒப்படைத்த கிராமத்துப் பெண் தனது நகைகளைக் காப்பாற்றிக் கொண்டதுடன், திருடனை பிடித்துக்கொடுத்து பலபேர் வீட்டில் திருடிய தங்க நகைகளையும் மீட்கக் காரணமாக இருந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் மணி, வசந்தி தம்பதியினர். இருதினங்களுக்கு முன்பு இரவில் நாய் குரைத்ததால் மணி, பட்டியில் அடைக்கப்பட்டள்ள தனது ஆடுகளுக்கு ஏதும் பிரச்சினையா எனப் பார்க்கச் சென்றுள்ளார்.
கணவர் நீண்டநேரம் ஆகியும் திரும்பாததால் மனைவி வசந்தி வீட்டைவிட்டு வெளியில் வந்து நின்றுள்ளார். அப்போது மறைந்திருந்த நபர் வசந்தா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடமுயன்றார். அந்தநபரைப் பிடிக்க முற்பட்ட வசந்தி, திருடனின் கால்களை கட்டிக்கொண்டு ஓடுவதைத் தடுத்தார்.
வசந்தி
கத்தியைக் காட்டியும் பயப்படாமல் கூச்சலிட்டார் வசந்தி. அருகில் இருந்து வீட்டைச் சேர்ந்தவர்கள் சத்தம் கேட்டுவரவே வசந்தி திருடனை பிடித்திருப்பதைப் பார்த்து அனைவரும் சேர்ந்து திருடனைப் பிடித்தனர். காலையில் அருகிலுள்ள விருவீடு காவல்நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் சங்கிலியைப் பறித்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த சண்முகா(45) என்பது தெரியவந்தது. இவர், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, விளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளில் நகைகள் திருடியதும் தெரியவந்தது.
இவர் திருடிய 50 பவுன் நகைகளை போலீஸார் மீட்டு சண்முகாவை கைது செய்தனர். கிராமத்துப் பெண் வசந்தி, திருடனுடன் நடத்திய போராட்டத்தால் அவரது தங்கசங்கிலியை பறிகொடுக்காமல் காப்பற்றியதுடன், திருடனை பிடித்துக்கொடுத்து பலபேர் வீட்டில் திருடிய தங்கநகைகளையும் மீட்கக் காரணமாக இருந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT