Published : 19 Oct 2019 12:50 PM
Last Updated : 19 Oct 2019 12:50 PM

வீடியோ, ஆடல் பாடலுடன்  நோட்டம் பார்த்த முருகன்: கூட்டாளி கணேசனிடமிருந்து சொகுசுப் பேருந்து பறிமுதல்

திருச்சி

திருவாரூர் முருகன் கூட்டாளி கணேசனிடம் நடந்த விசாரணையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் திருச்சி நகைக் கொள்ளை விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட சொகுசுப் பேருந்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு 3 பேர் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

சிசிடிவி காட்சியில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் குறித்த காட்சிப்பதிவு சிக்கியது. கொள்ளையர்கள் குறித்த எவ்விதத் துப்பும் கிடைக்காமல் போலீஸார் தடுமாறி வந்த நிலையில் திருவாரூரில் வாகனச் சோதனையில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவரிடம் நான்கரை கிலோ தங்க, வைர நகைகள் இருந்தன. அவை லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எனத் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

கொள்ளையடித்தது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் எனத் தெரியவந்தது. தென் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றிய முருகனை தென் மாநிலங்களில் போலீஸார் தேடிவந்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளி சுரேஷ் பின்னர் சரணடைந்தார்.

பிடி இறுகுவதை அடுத்து முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி அருகே உள்ள காமாட்சிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (28) சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமயபுரத்தைச் சேர்ந்த வாடிப்பட்டி அருகேயுள்ள தெத்தூரைச் சேர்ந்த தனது உறவினர் கணேசன் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.

சொகுசு மினிப்பேருந்து உள்ளே மாதிரிப்படம்

இதையடுத்து கணேசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் மேலும் சில வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முருகன் தலைமையில் நாங்கள்தான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தோம் என்று கணேசன் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் கணேசன் கூறியதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிச்சாண்டார் கோயில் கிளையில் கடந்த ஜனவரி 26, 27-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் வங்கியின் சுவரைத் துளையிட்டு, லாக்கர்களை உடைத்து நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கேஸ் கட்டிங் மெஷின் மாதிரிப் படம்

வங்கியிலிருந்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை போனதாக கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 9 மாதமாக போலீஸாருக்கு ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

தற்போது கணேசனின் வாக்குமூலம் மூலம் துப்பு கிடைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கணேசன் மூலமாக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலரிடம் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.

அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசுப் பேருந்து:

கணேசன் கூட்டாளிகளுடன் கொள்ளையடித்த பணத்தில் மினி சொகுசுப் பேருந்து ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வாகனத்தை வைத்தே கொள்ளையடித்துள்ளனர். மீதி நேரங்களில் சுற்றுலா வாகனமாக நகருக்குள் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார் கணேசன். வீடியோவில் படம் பார்ப்பது, ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக இருப்பது என சுற்றுலா வாகனத்தை முருகன், கணேசன், அவர்களின் கூட்டாளிகள் பயன்படுத்தி வந்தனர். இதில் பயணம் செய்தே கொள்ளையடிக்கும் இடத்தை நோட்டம் பார்ப்பது வழக்கம்.

பேருந்தில் கேஸ் கட்டிங் மெஷின், சிலிண்டர், கடப்பாரை, கயிறு உள்ளிட்ட கருவிகளும் எடை மெஷினும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் நோட்டம் பார்க்கவும் கொள்ளையடிக்கவும் சொகுசுப் பேருந்தையே பயன்படுத்தியுள்ளனர். கணேசன் அளித்த தகவலின்பேரில் சொகுசுப் பேருந்து, கேஸ் கட்டிங் மெஷின், நகை எடைபோடும் கருவி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x