Published : 18 Oct 2019 03:51 PM
Last Updated : 18 Oct 2019 03:51 PM

பாதுகாப்பான தீபாவளி ஷாப்பிங்; தி.நகரில் சிறப்பு ஏற்பாடு: காவல் ஆணையர் தகவல்

சென்னை

தீபாவளியைப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தி.நகரில் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையில் பாதுகாப்பு மிகுந்த பகுதிகளில் தி.நகர் காவல் மாவட்டத்துக்கு முக்கியப் பங்குண்டு. இதற்கு முன்னர் தி.நகர் துணை ஆணையராகப் பதவி வகித்த சரவணன் தி.நகர் காவல் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களை அமைத்தார். சென்னையில் காவல் அதிகாரியாக கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பதன் மூலம் குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்தவர்.

பின்னர் தி.நகர் துணை ஆணையராகப் பொறுப்பேற்ற அரவிந்தன் மேலும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் சைபர் நிபுணர் ஞானதேசிகன் உதவியுடன் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலி காவலர்கள் கையில் உள்ள செல்போனில் ஏற்றப்படும். அதில் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் இருக்கும், ஸ்கேன் செய்யும் வசதி இருக்கும்.

யாரையாவது சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்தால், அவர்கள் முகத்துக்கு நேரே செயலியில் உள்ள ஸ்கேன் மூலம் படம் பிடித்தால் அவர் இதற்கு முன்னர் குற்றச்செயலில் ஈடுபட்டவராக இருந்தால் உடனடியாக அனைத்துத் தகவல்களையும் காட்டிக் கொடுத்துவிடும்.

இதன் மூலம் தி.நகரில் பண்டிகை விசேஷ நாட்களில் நடமாடும் குற்றவாளிகளை உடனடியாக இனம் காண முடிந்தது. பின்னர் இதன் அவசியம் கருதி சென்னை காவலர்களுக்கு இதை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தினார். சென்னையில் பண்டிகைக் காலங்களில் அதிகம் பொதுமக்கள் கூடும் இடம் தி.நகர் பகுதியாகும்.

தீபாவளியை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்தும் விதமாக தி.நகரில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள், முகத்தை ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறியக்கூடிய ஃபேஸ் ட்ராக்கர்( face tracker ) வசதியுடன் கூடிய கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் முன்னால் குற்றவாளிகள் நடமாடினாலே காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு காட்டிக் கொடுத்துவிடும்.

உடனடியாக போலீஸார் சம்பந்தப்பட்ட நபரை ஒயர்லஸ் மூலம் தகவல் கொடுத்து பிடித்து விடுவார்கள். இவையல்லாமல் ட்ரோன்களின் (பறக்கக்கூடிய சிறிய விமானம் போன்ற கேமரா கருவி) இயக்கத்தையும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “ தீபாவளிப் பண்டிகைக்காக ஷாப்பிங் வரும் பொதுமக்கள், பாதுகாப்பாக வந்து செல்ல வசதியாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகர் பகுதியில் 1,200 சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தற்போது மேலும் 100 சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் தீபாவளிப் பண்டிகையின் போது தியாகராயநகர் பகுதியில் எந்த ஒரு குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி தி.நகரில் மக்கள் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வானில் பறந்து கண்காணிக்கும் ‘ட்ரோன் கேமராக்கள்’ மூலமும் போலீஸார் கண்காணிப்பார்கள். வழக்கமான பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸார் தவிர மேலும், கூடுதலாக 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்” என காவல் ஆணையர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x