Published : 16 Oct 2019 08:11 AM
Last Updated : 16 Oct 2019 08:11 AM
சென்னை
தூக்க மாத்திரை கலந்த மாவால் தோசை சுட்டுக் கொடுத்து, கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
சென்னை புழல் வெங்கடசாயி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). கறிக்கடை தொழிலாளி. இவரது மனைவி அனுப்பிரியா (26). 5 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளார். மனைவி யின் நடத்தையில் சுரேஷ் சந்தேகப் பட்டதாகவும், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுரேஷ் நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் கண் விழிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவரது மனைவி, சுரேஷ் இறந்து விட்டதாக கூறி கண்ணீர் வடித்துள்ளார். தகவல் அறிந்து புழல் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுரேஷ் குடிபோதையில் இறந்ததாக வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அனுப்பிரியாவை விசாரித்தனர். அப்போது சுரேஷை தான் கொலை செய்ததாக அனுப்பிரியா ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது சித்தி மகன் முரசொலி மாறனையும் போலீஸார் கைது செய்தனர்.
கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சுரேஷ், மது குடித்துவிட்டு வந்து அனுப்பிரியாவை அடிக்கடி சித்திரவதை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அனுப்பிரியா, கணவரை கொலை செய்ய தனது சித்தி மகன் முரசொலி மாறனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, அனுப்பிரியா தான் வேலை செய்யும் மருந்தகத்திலிருந்து தூக்க மாத்திரைகளை எடுத்துவந்து அதை தூளாக்கி தோசை மாவில் கலந்து சுரேஷுக்கு தோசை சுட்டுக் கொடுத்துள்ளார்.
அதை சாப்பிட்ட சுரேஷ் தூங்க சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் உறவினர் முரசொலி மாறனை வீட்டுக்கு அழைத்து வந்து, இருவரும் சேர்ந்து சுரேஷின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் குடி போதையில் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். அவரையும், அவரது உறவினரையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT