Published : 14 Oct 2019 10:09 AM
Last Updated : 14 Oct 2019 10:09 AM
கோவை
கோவை மாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கள்ள நோட்டு களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காந்திபார்க்கிலுள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் மாலை 2 இளைஞர்கள் கள்ள நோட்டு மாற்ற முயன்று சிக்கினர். ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இளைஞர்கள் ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கே.கே.நகரை சேர்ந்த பூபதி(26), தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த பிரவீன்குமார்(23) எனத் தெரிந்தது.
இருவரும் கணபதியை சேர்ந்த ரஞ்சித்(23), விருதுநகரை சேர்ந்த தன்ராஜ்(35) ஆகியோரிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், ரஞ்சித், தன்ராஜ் ஆகியோரையும் நேற்று பிடித்தனர். 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 கள்ள நோட்டுகள், பிரிண்டர், ஸ்கேனிங் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறும் போது,‘‘ இதற்கு தலைமையாக தன்ராஜ் செயல்பட்டு வந்துள்ளார். விருதுநகரில் இருந்து, கோவை இடிகரைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார். தன்ராஜூக்கு கோவையில் ரஞ்சித் நண்பராக அறிமுகமாகியுள்ளார். தன்ராஜ், ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்கு 5 கள்ள நோட்டுகளை ரஞ்சித்திடம் வழங்கியுள்ளார்.
ரஞ்சித் அவற்றை காந்திபுரம், கணபதி ஆகிய பகுதி களில் புழக்கத்தில் விட்டு மாற்றி யுள்ளார்.அப்போது, சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார், நெகமத்தை சேர்ந்த பூபதி ஆகியோர் பழக்கமாகியுள்ளனர். சிவில்சர்வீஸ் போட்டித் தேர்வுக்கு தயாராகிவந்த அவர், காந்திபுரத்தில் உள்ள ஐஏஎஸ் போட்டித் தேர்வு மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். பூபதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவர்கள் இருவரும் ரஞ்சித்திடம் இருந்து கள்ள நோட்டை பெற்று காந்திபார்க், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் கடந்த 3 மாதங்களில் கோவை மாநகரில் மட்டும் சில லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, நல்ல நோட்டுகளாக மாற்றியிருக்கலாம் எனத் தெரிகிறது. கள்ள நோட்டு மாற்ற முயன்றதாக முன்னரே தன்ராஜ் விருதுநகர் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார்’’ என்றனர்.
இதுகுறித்து குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் கூறும்போது, ‘‘கள்ள நோட்டு விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 பேரை தேடி வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT