Published : 14 Oct 2019 10:09 AM
Last Updated : 14 Oct 2019 10:09 AM

திருப்பூர் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: உடல்கள் புதைக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடத்தில் ஆய்வு- உறவினர்கள் 3 பேரை பிடித்து விசாரணை; இன்று தோண்டி எடுக்க முடிவு

உடல்கள் புதைக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்திய தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸார்.

திருப்பூர்

மகன் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க உறவினர் வீட்டுக்கு சென்ற தம்பதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், உறவினர்கள் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உடல்கள் புதைக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதி நிறுவன அதிபர் செல்வராஜ் (49). மனைவி வசந்தாமணி (45). மகன் பாஸ்கரனின் திருமணத்துக்கு அழைப்பதற்காக, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட சேனாதிபாளையம் அருகே உத்தண்டகுமாரவலசு கிராமத்தில் வசிக்கும் மூத்த சகோதரி கண்ணாத்தாள் (51) வீட்டுக்கு, மனைவியுடன் கடந்த 10-ம் தேதி செல்வராஜ் காரில் சென்றுள்ளார். அதற்கு பிறகு அவர்கள் வீடு திரும்ப வில்லை. அதே நாள் இரவு மகனுடன் அலைபேசியில் பேசியவர்கள், அதற்கு பிறகு மாயமாகினர். அலைபேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. சந்தேகமடைந்த பாஸ்கரன், கரூர் மாவட்டம் தாந்தோணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தம்பதியின் அலைபேசிகள் கடைசியாக சிக்னல் காட்டிய இடத்தை போலீஸார் ஆய்வு செய்தபோது, உத்தண்டகுமாரவலசு கிராமத்தை காட்டியுள்ளன.

இதைத்தொடர்ந்து கரூர் மற்றும் வெள்ளகோவில் போலீஸார் நேற்று முன்தினம் கண்ணாத்தாள் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் பின்புறத்தில் ஆய்வு செய்தபோது, பெண் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த உடல் வசந்தாமணி யுடையதாக இருக்கலாம், அருகிலேயே செல்வராஜ் உடல் புதைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெள்ளகோவில் போலீஸாா் சார்பில் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடல் புதைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்ட இடத்தில், திருப்பூர் மாவட்ட தடய அறிவியல் துறையினர் நேற்று காலை ஆய்வு நடத்தி, தேவையான ஆவணங்களை சேகரித்தனர். வெள்ள கோவில் காவல் ஆய்வாளர் ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட இடத்தில் மருத்துவக் குழுவினர் உதவியுடன், இன்று (அக்.14) உடல்களை தோண்டி எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே கண்ணாத்தாளை பிடித்த போலீஸார், அவரது மகள் பூங்கொடி, மருமகன் நாகேந்திரன் ஆகியோரை நேற்று பிற்பகல் பிடித்து, 3 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘இந்த விவகாரத்தை பொறுத்தவரை, சொத்து பிரச்சினையே முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறோம். விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், புதைக்கப்பட்ட உடல் காணாமல்போன தம்பதியுடையதாகவே இருக்கலாம். அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இருப்பினும் உடல்களைத் தோண்டி எடுத்த பிறகே உறுதி செய்யப்படும்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x