Published : 13 Oct 2019 11:16 AM
Last Updated : 13 Oct 2019 11:16 AM

சென்னை ஆவடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி: 4 பேர் உயிரிழந்தனர்

சென்னை, ஆவடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் கவலைக்கிடமாகியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகே உள்ள அண்ணனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த கோவிந்தசாமி,சுப்பம்மாள் தம்பதியினரின் மகன்கள் நாகராஜ், ரவி மற்றும் மகள் கல்யாணி ஆவார்கள்.

கோவிந்தசாமியின் மருமகன் ஆறுமுகம் தன் மனைவி கல்யாணி, குழந்தைகள் சர்வேஸ்வரி மற்றும் யோகேஸ்வரியைக் காணவந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரை ஆறுமுகம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் விஷம் அருந்தியிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் இறந்த 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x