Published : 11 Oct 2019 04:24 PM
Last Updated : 11 Oct 2019 04:24 PM
தேனி
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் விளையாட்டாக சீண்டிக் கொண்ட சம்பவம் கொலையில் முடிந்துள்ளது.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் திருமால். இவரின் தந்தை முருகன் கட்டிட வேலை செய்து வருகிறார். அல்லிநகரம் மட்டன் ஸ்டால் தெருவில் வீடு உள்ளது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மதிய உணவு இடைவேளையின்போது திருமாலும் மற்றொரு மாணவரும் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. திடீரென இருவரும் ஒருவொருக்கொருவர் தாக்கியுள்ளனர். தாக்குதல் சற்றே மூர்க்கத்தனமாக வகுப்பறையில் இருந்து மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். மற்றொரு மாணவர் திருமாலின் கழுத்தை சுற்றி இறுக்கிப் பிடிக்க திருமால் சிறிது நேரத்திலேயே மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.
உடனே பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) ஈஸ்வரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே மாணவர் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர்கள் முதலுதவி அளிக்க முயன்றபோது மாணவர் உயிரிழந்ததைக் கூறினர். இருந்தும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர் திருமாலின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளியின் முன் திருமாலின் உறவினர்கள் திரண்டனர். தேனி - பெரியகுளம் சாலையில் மறியல் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில் போலீஸ் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயிரிழந்த மாணவர் திருமாலின் பெற்றோர், உறவினர் மாணவர் பள்ளியின் முன் ஆவேசத்துடன் திரண்டதால் திருமால் மரணத்துக்கு காரணமான மாணவரை போலீஸார் அங்கிருந்து பாதுகாப்பாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில் பள்ளிக்கு வந்த டிஇஓ ரேணுகா தேவி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் இன்றும் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.
விளையாட்டாக நடந்த மோதலில் கொலை நடந்ததாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கூறினாலும்கூட கொலையின் பின்னணியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT