Published : 09 Oct 2019 10:31 AM
Last Updated : 09 Oct 2019 10:31 AM
புதுச்சேரி
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ மாணிக்கம். இவரது மகன் சிவா (35). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு - மடுகரை சாலையில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். சிவாவுக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தை சேர்ந்த விஜயலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின் கணவன்- மனைவி இருவரும் மதகடிப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இடையில் கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சிவா ஜூஸ் கடைக்கு சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது சிவாவை விஜயலட்சுமி போனில் அழைத்துள்ளார். சிவா வீட்டுக்குச் சென்ற சில மணி நேரத்தில், வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அங்கு சென்று கதவை திறக்க முயன்றனர். கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது புதுமண தம்பதியர் பிணமாக கிடப் பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கு எஸ்.பி ரங்கநாதன், திருபுவனை சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சமையல் அறையுடன் கூடிய படுக்கை அறையில் விஜய லெட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். வீட் டில் உடமைகள் எரிந்த நிலையில், சிவா உடலில் தீப்பற்றி உயிரிழந்து கிடந்தார். போலீஸார் இறந்த இருவ ரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், வீட்டின் விஜயலெட்சுமி மின் விசிறியில் சேலையால்
தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடியவே, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த சிவா சிலிண்டரில் கேசை திறந்துவிட்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் கட்டிலில் இருந்த பெட், ஜன்னல் விரிப்புகள் மற்றும் உடமைகள் தீப்பற்றி சிவா இறந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை போலீஸார் ஒப்படைத்தனர்.
விஜயலட்சுமி திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் வட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT