Published : 09 Oct 2019 07:33 AM
Last Updated : 09 Oct 2019 07:33 AM

வங்கி அதிகாரி வீட்டில் 116 பவுன் திருட்டு: வீட்டுப் பணிப்பெண்ணிடம் விசாரணை

சென்னை

நுங்கம்பாக்கத்தில் வங்கி அதிகாரி வீட்டில் 116 பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவர் வங்கி ஒன்றில் துணைத் தலைவராக உள்ளார்.

விஸ்வநாதன் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீட்டுக்கு குடும்பத்துடன் கடந்த 5-ம் தேதி சென்றுள் ளார். முன்னதாக வீட்டு சாவியை வீட்டுப் பணிப் பெண்ணான புஷ்பா நகரைச் சேர்ந்த சத்யா என்பவரிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் இரவு 10.45 மணியளவில் விஸ்வநாதன் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவில் 116 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணிப்பெண் சத்யா தன்னிடம் வழங்கப்பட்ட வீட்டு சாவியை கீழ் தளத்தில் சாவி போடும் பெட்டியில் போட்டுள்ளார். இதைத் தெரிந்து கொண்டு யாரோ எடுத்து திறந்து நகைகளை திருடிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

முதல் கட்டமாக வீட்டுப் பணிப்பெண், குடியிருப்பு வளாகத்தில் உள்ள கார் ஓட்டுநர்கள், காவலாளி ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை திருட்டில் வீட்டுப் பணிப்பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x