Published : 06 Oct 2019 06:40 PM
Last Updated : 06 Oct 2019 06:40 PM
கோழிக்கோடு,
கேரளாவை உலுக்கிய் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை 14 ஆண்டுகளில் கொலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதே குடும்பத்தைச் சேர்ந்த ஜோலி ஷாஜி (47) என்பவர் மேலும் பல கொலை முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் அம்முயற்சியில் அவர் வெற்றி பெற முடியவில்லை என்றும் போலீஸ் உயரதிகாரி கே.ஜி.சைமன் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு நகரிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கூடத்தயி என்ற இந்த கிராமத்தில்தான் 14 ஆண்டுகாலம் இந்த மர்மக் கொலைகள் நடந்துள்ளன. இந்தக் கொலைகளின் புதிர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு நெருக்கமான கிராம மக்கள் பலர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதோடு, ஜோலி தங்களையும் ஏமாற்றி நம்பவைத்தது குறித்து வேதனை தெரிவித்தனர்.
அனைத்து மரணங்களும் இயற்கை மரணங்களே என்று ஜோலி நம்பவைத்தார். அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய கிராமத்தினரும் அதை நம்பினர். இதில் கணவர் தாமஸ் ராய் இறக்கும் போது அது தற்கொலை என்று நம்பப்பட்டதும் இன்னொரு விசித்திரம்.
ஜோலியின் சொந்த ஊர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பன கிராமம் ஆகும். ஆனால் ஜோலியின் குடும்பத்துக்கே இவரது தீய செயல்கள் தெரியவில்லை. ஜோலியின் தந்தை ஜோசப்பும் தாங்கள் ஜோலியை சந்தேகிக்கவில்லை. ராயின் மரணத்துக்குப் பிறகு இன்னொரு சகோதரர் ரோஜோவுடன் ஜோலிக்கு சொத்துத் தகராறு இருந்தது தங்களுக்குத் தெரியும் என்றார். போலீஸ் விசாரித்து அனைத்தையும் வெளியிடட்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தான் கொலை செய்த சிலி மற்றும் அவரது 2 வயது குழந்தை பற்றியெல்லாம் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் சிலியின் கணவர், 2வயது குழந்தையின் தந்தை ஷாஜுவை அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தொடக்கத்திலிருந்தே ஷாஜு மீது ஒரு கண் இருந்த ஜோலி, குழந்தை தன்னுடைய திட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்று விஷம் வைத்துள்ளார்.
இதில் தன் முந்தைய கணவர் ராயின் சகோதரி ரெஜியையும் ஜோலி கொல்ல முயன்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2002-ல் மாமியார் அன்னம்மா இறந்த பிறகு ஜோலி கொடுத்த ஆயுர்வேத மருந்து ஒன்றை அருந்தினார் ரெஜி. உடனே அவர் படுக்கையில் விழுந்தார், ஆனால் தண்ணீர் ஏகப்பட்டது குடித்ததால் விஷம் சரிவர வேலை செய்யவில்லை. அப்போது தனக்கு இது கொலை முயற்சி என்ற சந்தேகம் ஏற்படவில்லை என்று போலீசிடம் கூறிய ரெஜி இப்போதுதான் புரிகிறது அது கொலை முயற்சி என்று எனத் தெரிவித்துள்ளார்.
ரோஜோ மட்டுமே ஜோலி மீது கடும் சந்தேகங்களைக் கொண்டிருந்தார், தன் குடும்பத்தையும் கொலை செய்ய ஜோலி திட்டமிட்டதாகவும் ஆனால் தாங்கள் அயல்நாட்டில் இருந்ததால் காரியத்தை நடத்த முடியவில்லை என்று போலீஸில் தெரிவித்தார்.ரோஜோதான் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தி உண்மையைக் கண்டுபிடிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார், இதனையடுத்துதான் கொல்லப்பட்டவர்களின் பிரேதங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் கோழிக்கோடு ஊரக எஸ்.பி. கே.ஜி.சைமன் "ஜோலியைக் கைது செய்தது நல்லதாகப் போய்விட்டது. அவர் மேலும் சில கொலைகளை முயன்றிருக்கலாம் என்று தற்போது அச்சம் எழுந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT