Published : 05 Oct 2019 10:01 PM
Last Updated : 05 Oct 2019 10:01 PM
திருவள்ளூர்
ஆவடியில் வயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகளை கொள்ளை அடித்து மாயமான இளம் தம்பதியை 10 மாதத்துக்குப்பின் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த ஆவடி சேக்காடு ஐயப்பன் நகரில் வசித்து வந்தவர் ஜெகதீசன்(62). இவரது இரண்டாவது மனைவி விசாலினி (58). இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். தனியாக வசித்து வந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த கைக்குழந்தையுடன் வந்த சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவியை பார்த்து இரக்கப்பட்ட ஜெகதீசன் தம்பதி வீட்டைப் பராமரிக்க வேலைக்கு அமர்த்தி தங்கள் வீட்டில் பின்புறம் தங்க வைத்திருந்தனர். சில மாதப் பழக்கத்தில் அவர்கள் யார் எவர் என விசாரிக்காமல் அவர்களது தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி தங்க வைத்திருந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி வழக்கம்போல் ஜெகதீசன் அவர் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவில் அவர் வீட்டிலுள்ள நாயைத் தாக்கி, ஜெகதீசன் அவர் மனைவி விசாலினியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த நபர்கள் வீட்டிலிருந்த 50 சவரன் தங்க நகைகள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றிருந்தனர்.
காலையில் தச்சு வேலைக்காக வந்த ஊழியர் ஒருவர், ஜெகதீசன் தம்பதி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஆவடி போலீஸுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த சுரேஷ்குமார், அவர் மனைவி இருவரையும் காணவில்லை என தெரிந்தது. அவர்களது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பொதுவாக கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வருபவர்கள் ஆட்களைக் கொல்ல மாட்டார்கள்.
ஆனால் அறிமுகமான நபர்கள் கொள்ளையடிக்கும்போது தங்களைக் காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்காக கொலை செய்வார்கள். ஆகவே அவர்கள்தான் தம்பதியை கொலை செய்து நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
நம்பியவர்களை கொலை செய்து நகைகளுடன் மாயமான ஆந்திர தம்பதிகளைப் பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திருட்டு வழிப்பறி உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றம் செல்லும் வழியில் போலீஸாரை தாக்கி தப்பியுள்ளார்.
பின்னர் மனைவி கைக்குழந்தையுடன் ஆவடி வந்து ஜெகதீசன் தம்பதி வீட்டில் தலைமறைவாக தங்கியுள்ளார். இதை அறியாத ஜெகதீசன் அவரை மகன்போல் பாவித்து நடத்தியுள்ளார். மேற்கண்ட விபரங்களை சேகரித்த போலீஸார் விசாகப்பட்டினம் சென்று தேடியபோது அவர்கள் சிக்கவில்லை. அதன்பின்னர் சுரேஷ்-லட்சுமி தம்பதி என்ன ஆனார்கள் என தெரியாமல் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சுரேஷ்குமார் மனைவி குழந்தையுடன் ஹரித்துவாரில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஆவடி காவல் ஆய்வாளர் காளிராஜ் தனிப்படையுடன் சென்று சுரேஷ்குமார் தம்பதியை கைது செய்து சென்னை அழைத்து வந்தார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகதீசனுடன் ஒருநாள் தனக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர் வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னார், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அன்று இரவு அவரையும் அவரது மனைவியையும் அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டில் உள்ள நகைப்பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து வடமாநிலத்துக்கு தப்பிச் சென்றோம் என்று தெரிவித்துள்ளார்.
கொலையாளிகளை 10 மாத நீண்ட தேடலுக்குப்பின் பிடித்த போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். பத்துமாத இடைவெளிக்குப்பின் இரட்டைக்கொலையில் கொலையாளிகள் சிக்கினர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT