Published : 04 Oct 2019 05:35 PM
Last Updated : 04 Oct 2019 05:35 PM

'நந்தா' சினிமா பாணியில் திருட்டு சம்பவம்: வீட்டையே காலி செய்த திருடர்கள் கைது- பொருட்களை எடுத்துச்சென்ற லாரியும் பறிமுதல்

திண்டுக்கல்

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து வீட்டையே காலிசெய்வது போல் அனைத்து பொருட்களையும் அள்ளிச்சென்ற திருடர்களை வத்தலகுண்டு போலீஸார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மணிமாறன். கேபிள் டிவி நடத்தி வருகிறார். அண்மையில், இவர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பிவந்துபார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த மணிமாறன் வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது வீட்டு உபயோகப்பொருட்களான கட்டில், மெத்தை, பிரிட்ஜ், சோபா, பேன், மிக்ஸி, இன்வெர்டர், இணையதள மோடம் என சகலத்தையும் திருடர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. பூஜை அறையில் இருந்த விநாயகர் படத்தை கூட திருடர்கள் விட்டுவைக்கவில்லை. வீட்டை காலிசெய்துவிட்டு சென்றதுபோல் வீடு காணப்பட்டது.

இதுகுறித்து மணிமாறன் வத்தலகுண்டு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். மணிமாறன் வீட்டில் திருடப்பட்ட இணையதளம் மோடம் செயல்பட தொடங்கியதை வைத்து துப்பு துலங்கியது.

இதையடுத்து நிலக்கோட்டை அருகே பொட்டிசெட்டிபட்டியை சேர்ந்த பெருமாள் அவனது கூட்டாளி சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ரவி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் திருடிச்சென்ற ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றினர்.

கடத்தலுக்குபயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆவாரம்பட்டியை சேர்ந்த சுப்புகாளையை போலீஸார் தேடிவருகின்றனர்.

நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கருணாஸ், வாடகைக்கு லாரி எடுத்துவந்து வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அள்ளிச்சென்றதுபோல், இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x