Published : 01 Oct 2019 10:29 AM
Last Updated : 01 Oct 2019 10:29 AM
சென்னை
தமிழகத்தில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை செய்து வந்த கும்பலை திருச்சி சிபிசிஐடி போலீஸார் பிடித்த நிலையில் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி நகரில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி திருச்சி ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுத் துறை (ஒசிஐயூ) காவல் ஆய்வாளர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் விடுதியில் தங்கியிருந்து கள்ளத் துப்பாக்கிகளை விற்க முயன்ற காவலர் பரமேஸ்வரன் என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 2 துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களைக் கைப்பற்றினார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகரம் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிஜிபி உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளான காவலர் பரமேஸ்வரன், நாகராஜ், சிவா, எட்டப்பன், கலை, சேகர், திவ்யபிரபாகரன், கலைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழகத்தில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்று வந்த மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டம் தீனா பகுதியில் வைத்து கிருஷ்ணமுராரி என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கிர்ஷ்ணமுராரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்சிங் தாக்கூர் என்பவரைத் தேடி தனிப்படை போலீஸார் பல முறை மத்தியப் பிரதேச மாநிலம் சென்று தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
8 மாதத் தேடலுக்குப் பின் தலைமறைவாக இருந்து வந்த பன்சிங் தாக்கூரைக் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டும் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருச்சி மாநகரம் சிபிசிஐடி ஓசியூ காவல் ஆய்வாளர் இளங்கோவன் ஜென்னிங்ஸ், உதவி ஆய்வாளர் வலம்புரி ஆய்வாளர்கள் சுரேஷ் ஜெயச்சந்திரன் மற்றும் தலைமைக் காவலர் ஆனந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மத்தியப் பிரதேசம் சென்று கடந்த ஒருவார காலமாக முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
பீனா, சாகர், போபால் ஆகிய இடங்களில் தேடியதில் தலைமறைவுக் குற்றவாளி பன்சிங் தாக்கூர் போபாலில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் பன்சிங் தாக்கூரை கடந்த 27 ஆம் தேதி அன்று மாலை சிபிசிஐடி தனிப்படை கைது செய்தது. பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவைப் பெற்று திருச்சி வரம்பிற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படையினர் திருச்சி அழைத்து வருகின்றனர்.
நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த கள்ளத்துப்பாக்கி சந்தையின் முக்கியக் குற்றவாளியை மத்தியப் பிரதேசம் சென்று முகாமிட்டு பிடித்த தனிப்படை போலீஸாரை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். தொடர்ந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்படுகிறது என்றும், அவ்வாறு வைத்துள்ள, விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT