Published : 30 Sep 2019 07:59 PM
Last Updated : 30 Sep 2019 07:59 PM

ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு: கூட்டாளிகளுடன் போலி நிறுவனம் நடத்திய நபர் கைது

கூட்டாளிகளுடன் சேர்ந்து 36 போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.250 கோடி அளவில் வர்த்தகம் செய்து ரூ.35 கோடி அளவில் ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்த நபரை சென்னை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்தனர்.

இது குறித்து சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

”ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஒருவரை சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரும், அவரது கூட்டாளிகளும் 36 போலி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்.

மற்ற நபர்களின் கே.ஒய்.சி. ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர். உண்மையான ரசீது அல்லது பொருள்கள் வழங்கல் இல்லாமல் ரூ. 250 கோடி மதிப்புக்கான விலைப்பட்டியல் தயாரித்து வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இது ரூ.35 கோடி வரி ஏய்ப்பு நோக்கம் கொண்டது என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும், பல உற்பத்தியாளர்களும், சேவை அளிப்பவர்களும் இதே அளவு தொகைக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ய இது உதவி செய்துள்ளது. விரிவான விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பல சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர், 3 நாட்களுக்கு முன் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் கடந்த 27-ம் தேதி ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி அக்.09 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் வைக்கப்பட்டார். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்”.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x