Published : 28 Sep 2019 09:43 AM
Last Updated : 28 Sep 2019 09:43 AM

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை

திருச்சி

அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளும், அதற்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடி திருமருதூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(39). இவர் நடத்தி வந்த அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான ஆவணங்கள் காவல்துறையினரின் விசாரணைக்காக, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கடந்த 2012-ல் திருச்சி மாவட்ட காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து லால்குடி உதவி ஆய்வாளராக இருந்த சந்திரமோகன் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து, லால்குடி டிஎஸ்பியாக இருந்த கே.செல்வமணி, ராஜமாணிக்கத் திடம் மேல் விசாரணை நடத்தினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக டிஎஸ்பி செல்வமணியை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாக உதவி ஆய்வாளர் சந்திரமோகனும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். அதன்பின், செல்வமணி, சந்திரமோகன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவிச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார்.

அப்போது லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக டிஎஸ்பி செல்வமணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், லஞ்சம் வாங்க உடந்தையாக இருந்த குற்றத்துக்காக சந்திரமோகனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x