Published : 27 Sep 2019 12:00 PM
Last Updated : 27 Sep 2019 12:00 PM
சென்னை
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி மணிகண்டன் குடியிருந்த சென்னை கொரட்டூர் வீட்டிலிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 20 நாட்களாக சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 4-வது தெரு எண்-168 என்ற விலாசத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் தங்கியிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்தின் நீண்டகாலக் குற்றப் பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் மீது 10 கொலை வழக்குகள், 6 வழிப்பறி மற்றும் 4 கடத்தல் வழக்குகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அப்பகுதியில் பெரிதும் அச்சுறுத்தலாகவும், போலீஸாருக்குச் சவாலாகவும் அவர் விளங்கி வந்தார்.
மணிகண்டனை நெடுநாட்களாக விழுப்புரம் போலீஸார் தேடி வந்த நிலையில், சென்னை கொரட்டூரில் அவர் கூட்டாளிகளுடன் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து அவரைப் பிடிக்க விழுப்புரம் போலீஸார் அங்கு சென்றனர். அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது நடந்த மோதலில் எஸ்.ஐ.பிரபு காயமடைந்தார்.
போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி மணிகண்டனின் மார்பில் குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தனஞ்செழியன் கடந்த 2 நாட்களாக மணிகண்டன் வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார்.
மணிகண்டன் உறவினர்கள், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த காவலர்கள், சம்பவம் நடந்த வீட்டில் அவர் விசாரணை நடத்தினார். நேற்று கொரட்டுரில் உள்ள என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட அடுக்குமாடி வீட்டில் தனித்தனியாகச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது ரவுடி மணிகண்டன் வீட்டில் அதிக அளவில் நாட்டு வெடிகுண்டுகள் சணல்களில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மணிகண்டன் செய்த 6-க்கும் மேற்பட்ட கொலைகளில் 4 கொலைகள் வெடிகுண்டு வீசப்பட்டு நடத்தப்பட்ட கொலைகள் ஆகும். முதலில் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு அதன் பிறகு தாக்குதல் நடத்திக் கொலை செய்வது மணிகண்டனின் வழக்கம்.
நாட்டு வெடிகுண்டுகள் செய்வதிலும் மணிகண்டன் கைதேர்ந்தவர் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. நாட்டு வெடிகுண்டு மற்றும் அதைத் தயாரிக்கும் வெடி மருந்துகள், சணல் மற்றும் மூலப்பொருட்கள், வெடிக்கும் நிலையில் உள்ள 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை அறிந்ததும் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிரச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெடிகுண்டை அறியும் மோப்ப நாய் தாமரையும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஏதாவது வெடிகுண்டு உள்ளதா என போலீஸார், நிபுணர்கள் சோதனையிட்டனர். கிடைத்த வெடிகுண்டைப் பாதுகாப்பாக செயலிழக்க எடுத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT