Published : 25 Sep 2019 08:47 PM
Last Updated : 25 Sep 2019 08:47 PM
சென்னை
வடபழனியில் நேற்றிரவு மாநகர பேருந்து மோதி ஒரு பெண் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் மாநகரப்பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை மதுரவாயில், பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (40). இவரது மனைவி கலைச்செல்வி(36) பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மொத்தமாக பூவை வாங்கி கட்டி விற்பனை செய்வது இவரது வழக்கம்.
மார்க்கெட் சென்று பூக்களை வாங்கி செல்ல வசதியாக இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இன்று மதியம் இவர் வழக்கம் போல் பூ வியாபாரத்திற்காக பூக்கள் வாங்க கோயம்பேடு மார்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கி தனது இருசக்கர வாகனத்தில் பக்கவாட்டில் வைத்தப்படி சைதாப்பேட்டை செல்வதற்காக மதியம் 4-00 மணி அளவில் வடபழனி சிவன் கோவில் தெருவழியாக வந்துள்ளார்.
தனது வாகனத்தில் வடபழனி சிவன் கோவிலிலிருந்து திரும்பி துரைசாமி சாலையில் சென்று கொண்டிருந்த போது குப்பை த்தொட்டி ஒன்று சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. அதை கடந்து செல்லும்போது அந்த வழியாக வந்த 12பி எண் மாநகரப்பேருந்து அவர்மீது திடீரென மோதியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த அவரது இடுப்பின்மீது சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வி உயிரிழந்தார்.
கலைச்செல்வி ஹெல்மெட் அணிந்து முறையாக வாகனத்தைச் செலுத்தியுள்ளார். அவரது இருசக்கர வாகனத்திற்கோ, வாங்கிச் செல்லும் பூக்களுக்கோ ஒரு சிறு சேதாரம்கூட இல்லாத நிலையில் விபத்தில் கலைச்செல்வி மட்டும் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்து மற்றும் ஓட்டுனரை பிடித்த பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடபழனி துரைசாமி சாலையில் திடீரென்று போக்குவரத்து மாற்றம் செய்து சாலையில் பேருந்து திருப்பி விட்டதன் காரணமாக அதிக அளவில் அப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது மூன்றாவது பெரிய விபத்து என்றும் இதற்கு முன் மாணவன் ஒருவன் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் ஆங்காங்கே நிற்பதும், குப்பைத்தொட்டிகள், வியாபார நிறுவனங்களின் போர்டுகள், வாகன பார்க்கிங் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் வடபழனி பகுதியில் அடுத்தடுத்து மாநகரப் பேருந்து மோதி இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT