Published : 25 Sep 2019 04:10 PM
Last Updated : 25 Sep 2019 04:10 PM

'பாபநாசம்' சினிமா பாணியில் சம்பவம்: மின் வேலியில் சிக்கி உயிரிழந்தவர் உடலை போலீஸாருக்குத் தெரியாமல் புதைத்த 2 பேர் கைது- 7 ஆண்டுகளுக்குப் பின் துப்பு துலங்கியது

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே 7 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான நபரைப் பற்றிய துப்பு துலங்கியது. மின் வேலியில் சிக்கி இறந்த அந்த நபரின் உடலை போலீஸாருக்குத் தெரியாமல் மறைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தைச் சேர்ந்தவர் மன்னார் (32). விவசாய கூலித் தொழிலாளியான இவர், கடந்த 7.1.2012 அன்று அப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் மன்னாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக சிவகிரி காவல் நிலையத்தில் மன்னாரின் மனைவி மேரி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இருப்பினும் மன்னாரைக் கண்டுபிடிக்க முடியாததால் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேரி வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் டிஎஸ்பி அனில்குமார், இன்ஸ்பெக்டர் உலகராணி உள்ளிட்ட சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், மன்னார் வேலைக்குச் செல்லும்போது பன்னீர் என்பவரின் விவசாய நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. பன்னீர், அவரது மனைவி பாப்பா, மருமகன் பாலகுருநாதன் ஆகியோர் சேர்ந்து, மன்னார் உடலை போலீஸாருக்குத் தெரியாமல் தோட்டத்திலேயே புதைத்ததும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் எதுவுமே தெரியாததுபோல் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். 'பாபநாசம்' திரைப்படப் பாணியில் நடந்த இந்தச் சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சமீபத்தில் மன்னார் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்ததில் அவரது எலும்புக்கூடுகள் சிக்கியுள்ளன. இதையடுத்து, பன்னீர் மனைவி பாப்பா, அவரது மருமகன் உலகநாதன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். கடந்த 2018-ம் ஆண்டு பன்னீர் இறந்துவிட்டதால் அவர் வழக்கில் சேர்க்கப்படவில்லை.

- த.அசோக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x