Published : 24 Sep 2019 08:58 PM
Last Updated : 24 Sep 2019 08:58 PM

கொரட்டூர் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொலை: எஸ்.ஐ. காயம்

சென்னை

கொரட்டூரில் ரவுடி மணிகண்டன் என்பவரைப் பிடிக்க முயன்றபோது விழுப்புரம் போலீஸாரை அவர் தாக்க முயன்றார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பெயர் மணிகண்டன் (எ) தாதா மணிகண்டன்(39).

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த 20 நாட்களாக சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 4-வது தெரு எண்-168 என்ற விலாசத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அவர் தங்கியிருந்தார்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையத்தின் நீண்டகால குற்றப் பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் மீது 10 கொலை வழக்குகள், 6 வழிப்பறி மற்றும் 4 கடத்தல் வழக்குகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அப்பகுதியில் பெரிதும் அச்சுறுத்தலாகவும், போலீஸாருக்குச் சவாலாகவும் அவர் விளங்கி வந்தார்.

மணிகண்டனை நெடுநாட்களாக விழுப்புரம் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாக விழுப்புரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தனிப்படை போலீஸார் ரவுடி மணிகண்டனைப் பிடிக்க சென்னை வந்தனர். சென்னை கொரட்டூரில் மணிகண்டன் கூட்டாளிகளுடன் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து அவரைப் பிடிக்க விழுப்புரம் போலீஸார் அங்கு சென்றனர்.

அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது மணிகண்டன் தனது கையில் வைத்திருந்த பெரிய பட்டாக்கத்தியால் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு என்பவர் தலையில் தாக்கினார். உடனே உதவி ஆய்வாளர் பிரகாஷ் தனது கையில் இருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். இதில் ரவுடி மணிகண்டனின் மார்பில் குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மணிகண்டனின் கூட்டாளிகள் 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். உயிரிழந்த மணிகண்டன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் சமீப வருடத்தில் நடந்த மூன்றாவது என்கவுன்ட்டர் இது. ஐஸ் ஹவுஸ் ஆனந்தன் என்கிற ரவுடி போலீஸாரைத் தாக்கி விட்டு தலைமறைவாக இருந்தார். அடையாறு மத்திய கைலாஷ் அருகே ஏசி சுதர்சன் தலைமையிலான தனிப்படை போலீஸார் பிடிக்க முயன்றபோது தாக்க முயன்றதில் ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வியாசர்பாடி ரவுடி வல்லரசு போலீஸாரை வெட்டி விட்டு கொடுங்கையூர் பகுதியில் பதுங்கியிருந்தபோது இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், ரவி தலைமையிலான போலீஸர் மடக்கிப் பிடிக்க முயன்றபோது தாக்க முயல என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

2 சம்பவங்களும் சென்னை போலீஸார் நடத்திய என்கவுன்ட்டர் என்கிற நிலையில் விழுப்புரம் போலீஸார் சென்னை கொரட்டூரில் ரவுடியைப் பிடிக்க முயன்றபோது நடந்த 3-வது என்கவுன்ட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x