Published : 24 Sep 2019 02:23 PM
Last Updated : 24 Sep 2019 02:23 PM
புதுச்சேரி
காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மனைவி கண்ணெதிரே வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 பேர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கொலை வழக்குகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டைச் சேர்ந்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி மோட்டார் சைக்கிளில் காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தபோது தமிழகப் பகுதியான பெரியமுதலியார் சாவடியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழக ஆரோவில் போலீஸார் நடத்திய விசாரணையில் காலாப்பட்டைச் சேர்ந்த சந்திரசேகர் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராகச் சேர்க்கப்பட்டார். இவரும் காங்கிரஸ் பிரமுகர்.
காலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்தப் பணிகள் தொடங்கி பல்வேறு விஷயங்களில் ஜோசப் ஆதிக்கம் செலுத்தியதால் அவரை இரு முக்கியக் கட்சி பிரமுகர்களே இணைந்து திட்டமிட்டு கொலை செய்ததுடன் அவர்களும் கைதாகியிருந்தனர். கைதான சந்திரசேகர் பிணையில் வெளியே இருந்தார்.
இந்நிலையில், ஜோசப் கொலையில் தொடர்புடையவரும், சந்திரசேகரின் நண்பரும், ஜோசப் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பார்த்திபனின் மனைவி சித்ரா உடல்நிலை சரியில்லாததால் நேற்று (செப்.23) இறந்தார். அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிப்பதற்காக சந்திரசேகர் தனது மனைவி சுமலதாவுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை சென்றார்.
அவர்களைப் பின்தொடர்ந்த மர்ம கும்பல், திடீரென நாட்டு வெடிகுண்டை சந்திரசேகர் மீது வீசினர். இதில் காயமடைந்து நிலைகுலைந்த சந்திரசேகர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அதையடுத்து சந்திரசேகரை மர்ம நபர்கள் தலையில் வெட்டிக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக இன்று (செப்.24) காலாப்பட்டு சுதன் (27), கணுவாப்பேட்டை அப்துல் நசீர், மேட்டுப்பாளையம் ரங்கராஜ் ஆகிய மூவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
சிபிஐ விசாரணை கோரும் முன்னாள் அமைச்சர்:
இச்சூழலில் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் இன்று கூறுகையில், "கடந்த ஆண்டு காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ஜோசப் கொலையைத் தொடர்ந்து, நேற்று ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இறந்த இருவரும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். ஜோசப் முதல்வருக்கும், சந்திரசேகர் அமைச்சர் ஷாஜகானுக்கும் நெருக்கமாக இருந்தவர்கள். அதிகாரப் போட்டியே இந்தக் கொலைகள் நடப்பதற்குக் காரணம். இந்த இரண்டு கொலை வழக்கிலும் முக்கிய அரசியல் புள்ளிகள் உள்ளனர். இப்பிரச்சினையில் ஆளுநர் கிரண்பேடி தலையிட்டு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்" என்று தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT