Published : 24 Sep 2019 01:27 PM
Last Updated : 24 Sep 2019 01:27 PM
கோத்தகிரி
கோத்தகிரியில் அடுத்தடுத்து தனித்தனியாக இரு கொலைகள் நடைபெற்ற சூழலில், இருவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கீழ்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் விசாலாட்சி (70). திருமணம் ஆகாத அவர் தேனாடு ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். தனது அண்ணன் மகன் மூர்த்தியை (45) விசாலாட்சியே கவனித்து வந்துள்ளார். மூர்த்திக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற மூர்த்திக்கும், விசாலட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், விசாலாட்சியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார் மூர்த்தி. இதில், விசாலாட்சிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கவும் மூர்த்தி முயன்றுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த விசாலாட்சி, அருகில் இருப்பவர்களின் உதவியுடன் கோத்தகிரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
நிலைமை மோசமானதால் அங்கிருந்து கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இது குறித்து சோலூர் மட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூர்த்தியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கோத்தகிரி அருகேயுள்ள சோலூர்மட்டம் நீர்கண்டி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி பாண்டியன் (80). இவர், அதே பகுதியில் கோழிக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மகன் சின்னபாண்டி (40). சின்னபாண்டியின் மனைவி பிரிந்து சென்ற நிலையில், அவரை தந்தை பாண்டியன் பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் வீட்டுக்குச் சென்ற சின்னபாண்டி, தனது தந்தை பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, பாண்டியனைத் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயம் அடைந்த பாண்டியன் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக சோலூர்மட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னபாண்டியைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT