Published : 21 Sep 2019 04:55 PM
Last Updated : 21 Sep 2019 04:55 PM

நங்கநல்லூர் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை திருட்டு: வடமாநில இளைஞர்கள் கைவரிசையா?- போலீஸ் விசாரணை

சித்தரிப்புப் படம்

நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டில் வடமாநில இளைஞர்களின் கைவரிசை உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ரமேஷ் (52). இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். ரமேஷ் சொந்தமாக கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். கடந்த வாரம் வேண்டுதலை நிறைவேற்ற சபரிமலைக்குச் சென்றுவிட்டார்.

வீட்டில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தனியே இருந்தனர். நேற்று காலை பிள்ளைகள் வெளியே சென்றுவிட்டனர். ரமேஷின் மனைவியும் வீட்டை பூட்டிக் கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

உறவினர் வீட்டிலிருந்து இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வீட்டுக்குப் பிள்ளைகள் திரும்பாத நிலையில் கதவைத் திறக்க முயன்றபோது ஏற்கெனவே கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே வீட்டிற்குள் சென்று பீரோவைப் பார்த்தபோது அதுவும் உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த 120 பவுன் தங்க நகை, 10 பவுன் வைர நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.1 லட்சம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். நகைகள் திருட்டுப்போனது குறித்து தகவலறிந்து வந்த போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் கைரேகை உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். திருடிய நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பொதுமக்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் வடமாநில இளைஞர்கள் இரண்டுபேர் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்ததாகப் பலரும் தெரிவித்துள்ளனர். அவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

திருட்டுப்போன வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. அந்தப் பகுதியில் உள்ள மற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அதில் வடமாநில இளைஞர்கள் பதிவு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெற்கு மண்டல காவல் எல்லையில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கறிஞர் சத்தியமூர்த்தி என்பவர் வீட்டிலிருந்து 150 சவரன் நகை, 2.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மாயமானது. இந்நிலையில் நங்கநல்லூரில் கைவரிசை காட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x