Published : 20 Sep 2019 03:27 PM
Last Updated : 20 Sep 2019 03:27 PM

ராகுல் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சைப் பேட்டி: காவல் ஆணையரிடம் காங்கிரஸ் புகார்

சென்னை

ராகுல், சோனியா குறித்து அவதுறாகப் பேட்டி அளித்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராகுல் காந்தி இந்தியரே இல்லை, வெள்ளைக்காரர் என்று தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார். இதற்கு ஆதாரமாக யார் மடியில் வைத்து மொட்டை போட்டுக் காது குத்தினார்கள்? அப்படி நடக்கவில்லை அல்லவா? அதனால்தான் அவர் இந்தியர் அல்ல என்கிறேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்திருந்தார்.

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையானது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல் என நடத்தினர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசேகரன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் மனுவில், “நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக இருக்கிறேன். கடந்த 14-ம் தேதி மற்றும் 17-ம் தேதி அன்று தனியார் தொலைக்காட்சிக்கு சந்திராயன்-2 குறித்த கேள்விக்கு பேட்டி கொடுத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளை எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களை அவமதிக்கும் விதமாகவும், பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி வருகின்றார். தமிழக அரசின் அமைச்சராக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு அரசியலமைப்புப்படி பதவி வகிக்கக் கூடிய ராஜேந்திர பாலாஜி, பால் வளத் துறையில் ஊழல், கலப்படப் புகார் மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக கூண்டில் நின்று கொண்டுள்ளார்.

தன் மீதுள்ள புகாரைத் திசை திருப்பவும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய தொடர்ந்து ஐந்தாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய சோனியா காந்தி பற்றியும், ராகுல் காந்தி பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்களை வேண்டுமென்றே மறைத்து பொது மக்களை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாடு கலாச்சாரம் கொண்ட இந்திய நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் ராகுல் காந்திக்கு தாய்மாமன் மடியில் உட்கார வைத்து இந்தியாவில் மொட்டை போடவில்லை. அதனால் அவர் இந்தியர் இல்லை என்று ஒரு நாலாந்தர மனிதராகப் பேசி, மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருப்பதற்குத் தகுதி இல்லாதவர் என்பதை மேற்குறிப்பிட்ட பேச்சு காண்பிக்கின்றது. மேலும் இந்திய நாட்டின் பிரதமரைப் பற்றிக் குறிப்பிடும்போது கொச்சையான வார்த்தையில் குறிப்பிடுகிறார். தான் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிராகப் பேசி வருகிறார்.

அதைத் தொடர்ந்து உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளையும், அருவருப்பான வார்த்தைகளை, மக்கள் மத்தியில் கூறி பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதோடு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை தெரியாது. ஏதோ தாய்மாமன் மடியில் உட்கார்ந்து மொட்டை போட்டால் தான் இந்தியர், மற்றவர்கள் இந்தியர்கள் இல்லை என்பது போல் கண்ணியக் குறைவாகப் பேசி வரும் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பால் கலப்படப் புகாரில் இவர் தேவையற்றுப் பேசுவதற்குத் தடை விதித்ததை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். எனவே தாங்கள் உரிய முறையில் விசாரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறாகப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசுதல் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் போன்ற குற்றச்செயல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் புகாரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x