Published : 20 Sep 2019 12:12 PM
Last Updated : 20 Sep 2019 12:12 PM
சென்னை
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐடி பூங்கா வளாகத்தின் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். அனுமதி மறுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்கிருந்து விழுந்துள்ளதால் கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில், அம்பிட் பூங்கா சாலையில் தனியார் ஐடி நிறுவனம் ஒன்று உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த டேனிடா ஜூலியஸ் (24) என்பவர் இந்த ஐடி நிறுவனத்துக்குத் தேர்வாகி சில நாட்களாகத்தான் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.
அந்த வளாகம் ஏழு அடுக்குகளை கொண்டது. 8-வது அடுக்கு மேல்தளம் என்பதால் அங்கு யாரையும் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் நேற்றிரவு கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து டேனிடா ஜூலியஸ் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய போலீஸார் டேனிடாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
8-வது மாடியிலிருந்து இளம்பெண் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை சந்தேக மரணமாகப் பதிவு செய்துள்ள போலீஸார் அவர் ஏன் அங்கு சென்றார், அவராகச் சென்றாரா அல்லது அங்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியில் சேர்ந்த சில நாட்களில் ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT