Published : 18 Sep 2019 12:41 PM
Last Updated : 18 Sep 2019 12:41 PM
ராஜபாளையம்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல நாட்களாக வன விலங்குகளைத் தொடர்ந்து வேட்டையாடிவந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான புல்பத்தி காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுடன் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் இராஜபாளையம் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், வனவர் குருசாமி மற்றும் வனகாப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியான புல்பத்தி காட்டுப்பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கணேசன் வயது 30, ராதாகிருஷ்ணன் மகன் சிவராமகிருஷ்ணன் வயது 21 ,ஆகியோர் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்கள், கொய்யாப்பழம் மற்றும் பனம்பழங்களின் நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்து வனவிலங்குகளை வேட்டையாடக் காத்திருந்ததையும் அறிந்தனர்.
உடனே, அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் 3 செல்போன் ஒரு பைக், 5 நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதற் கட்ட விசாரணையில் சுந்தரராஜபுரம் பருதியைச் சேர்ந்த பலர் வன விலங்குகளை வேட்டையாடி வருவது தெரியவந்துள்ளது. அதிலும் கைதான இருவரும் பலமுறை வனவிலங்குகளை வேட்டையாடி மாமிசங்களை விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
கைதான இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள், அவர்களை மதுரை சிறைக்குக் கொண்டு சென்றனர் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT