Published : 11 Sep 2019 02:16 PM
Last Updated : 11 Sep 2019 02:16 PM

மதுரையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மணமகன் கைது: துப்புரவுத் தொழிலாளி பலி; 3 பேர் காயம்

விபத்தில் பலியான தமிழரசன்

மதுரை

மதுரையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மணமகனை போலீஸார் கைது செய்தனர். இந்த விபத்தில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

மதுரை கோமதிபுரம் பகுதி மருது பாண்டியன் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு இன்று (புதன்கிழமை) காலை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வழக்கம்போல் துப்புரவுப் பணி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சொகுசுக் கார் ஒன்று வந்தது. திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கிய கார் சாலையில் நின்றவர்கள் மீது மோதியது. இதில், மதுரை அண்ணாநகர் கரும்பாலை பி.டி.காலனியைச் சேர்ந்த தமிழரசன் (43) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர். விபத்தில் பலியான தமிழரசன் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சித் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய காரை மடக்கிப் பிடித்த மக்கள் அதிலிருந்தவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழரசனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கார் விபத்தை ஏற்படுத்திய மேலமடையைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்ற நிஷாந்துக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. சாலை விபத்து ஏற்படுத்தியதால் நிஷாந்த் கைது செய்யப்பட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது.

நிஷாந்த் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். நண்பர்களுடன் மண்டபத்துக்குச் செல்லும்போதே விபத்து நடந்திருக்கிறது. விபத்து குறித்து தொடர்ந்து அண்ணாநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x