Published : 06 Sep 2019 09:55 PM
Last Updated : 06 Sep 2019 09:55 PM
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோ தவணைக்கட்ட செயின் பறிப்பில் ஈடுபட்டார், அவரை ஆட்டோவுக்கு சவாரிக்கு அழைப்பதுபோல் போலீஸார் வரவழைத்து கைது செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த நபர் ஒருவர் அவர் கழுத்திலிருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதுப்பற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அங்கு கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் பதிவெண் தெரியாமல் இருக்க பதிவெண்ணை சந்தனம் பூசி மறைத்த மோட்டார் சைக்கிளில் ஆரஞ்சு ஹெல்மெட் அணிந்தப்படி செல்வது பதிவாகியிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண் அவர்தான் என அடையாளம் காட்டினார். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் அணிந்திருந்த ஹெல்மட்டில் ஆர்.எஸ். என எழுதப்பட்டிருந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை தொடர்ச்சியாக பின்பற்றி கைப்பற்றிய போலீஸார் ஆராய்ந்த போது அந்த பைக் சென்னை வடபழனி கோவில் அருகில் கடைசியாக சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும், போரூர், வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் லட்டு என்கிற விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவர்தான் செயினைப்பறித்த நபர் என்பதை உறுதிசெய்த போலீஸார் வடபழனியில் உள்ள சில ஆட்டோ ஸ்டாண்டுகளில், லட்டு விஜயகுமாரை எப்படி போய் பார்ப்பது என்று கேட்டுள்ளனர்.
அதெல்லாம் வேண்டாம் சார் போனில் அழைத்தால் சவாரி வருவார் என்று கூறினர். உடனடியாக போலீஸார் வாடிக்கையாளர் போல ஆட்டோ சவாரிக்கு வேண்டும் என லட்டுப்போல பேசி லட்டு விஜயகுமாரை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரவழைத்தனர்.
அங்கு சவாரி போகும் ஆசையில் ஆட்டோவுடன் வந்த லட்டு விஜயகுமாரை போலீஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீஸார் ஏன் செயினைப்பறித்தாய் என விசாரணை நடத்தினர்.
அப்போது லட்டு விஜயகுமார் தனக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு பிரிந்து விட்டதாகவும், பின்னர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். ஆட்டோ ஓட்டுவதுதான் தனது தொழில் ஆட்டோ ஓட்டுவதுடன் சினிமா, கட்சி போஸ்டர் ஒட்டுவது போன்ற பணிகளிலும் தெரியும். ஆட்டோ தவணை முறையில் வாங்கியதில் மாதம் 8000 ரூபாய் வரை தவணை கட்ட வேண்டும்.
மூன்று மாதங்கள் தவணை செலுத்தாததால் பைனான்ஸ் நிறுவனத்தினர் ஆட்டோவை பறிமுதல் செய்து விட்டனர். ஆட்டோவை மீட்பதற்கு வேறு வழி தெரியாததால் செயின் பறித்து அதில் வரும் பணத்தை வைத்து தவணையை கட்டி ஆட்டோவை மீட்கலாம் என நினைத்து செயின்பறிப்பில் ஈடுபட்டுள்ளார். நம்பர் தெரியாமல் இருக்க நம்பர் பிளேட்டில் சந்தனமும், ஹெல்மட்டும் அணிந்து செயின் பறிக்க ஹெல்மெட்டில் உள்ள ஆர்.எஸ். என்கிற இனிஷியல் அவரை காட்டிக்கொடுத்துவிட்டது.
பறித்த செயினை விற்று ஆட்டோ தவணை செலுத்தி அதனை மீட்டுள்ளார், அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 5 சவரன் நகையை மீட்டனர். லட்டு விஜயகுமார் மீது கொரட்டூரில் ஒரு கொள்ளை வழக்கும், செங்குன்றத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT