Last Updated : 06 Sep, 2019 03:56 PM

1  

Published : 06 Sep 2019 03:56 PM
Last Updated : 06 Sep 2019 03:56 PM

சேலம் அருகே கல்லூரி மாணவர் கொலை: சக நண்பர்களே இரும்புக் கம்பியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

பிரதிநிதித்துவப் படம்

சேலம்

சேலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவரை அவரது நண்பர்களே இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தாசநாயக்கன்பட்டி அடுத்த நாழிக்கல்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார் (19 ). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர்அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். திலீப் குமாரின் நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன் மற்றும் சூர்யா .

இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து பின்னர் ஏரியில் விநாயகர் சிலையை கரைத்து வந்தனர் .

இந்தநிலையில், நண்பர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு திலீப்குமார் தனியாகவும், திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் தனியாகவும் விநாயகர் சிலை வைத்தனர்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது அனைவரும் ஆடிப்பாடி சென்றனர். அப்போது திலீப்குமார் அவரது பழைய நண்பர்கள் திருநாவுக்கரசு, சரவணன் ,சூர்யாவை பார்த்து கிண்டல் கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திலீப் குமாரை நண்பர்கள் மூவரும் தாக்க முற்பட்டனர். பின்னர் பொதுமக்கள் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று (செப்.6) நள்ளிரவு திலீப்குமார் அவரது வீட்டருகே இருந்தார். அப்போது அங்கு திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் வந்து மீண்டும் தகராறு செய்துள்ளனர். பிறகு திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகிய மூவரும் இரும்புக் கம்பியை எடுத்து வந்து திலீப் குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த திலீப்குமார் தப்பி ஓடினார் .

ஆனால் விடாமல் துரத்திச் சென்று மீண்டும் திலீப்குமாரை தாக்கினர். பலத்த காயம் அடைந்த திலீப் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

திலீப் குமார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திலீப்குமாரை தூக்கிவந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்துவிட்டார். பின்னர் மல்லூர் போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். இந்த கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகர் கொலையில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சரவணன், சூர்யாவை பிடிக்க சேலம் ரூரல் காவல் துணை கண்காணிப்பாளர் உமாசங்கர் தலைமையில் 3 தனிப்படை அமைத்தார்.

இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என திலீப்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .இதை அறிந்த சேலம் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடம் வந்து கொலையாளிகள் திருநாவுக்கரசு மற்றும் சரவணனை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x