Published : 31 Aug 2019 07:49 PM
Last Updated : 31 Aug 2019 07:49 PM

பழுதான படகுகள், குறைவான போலீஸார்: 1071 கி.மீ நீள கடல் பாதுகாப்புக்கு 12 படகுகள்; பற்றாகுறையில் கடலோர காவல் குழுமம்

தமிழகத்தின் நீளமான 1071 கி.மீ கடற்கரைப்பகுதி பாதுகாப்புக்கு உள்ள காவல் குழுமத்துக்கு போதிய படகுகள், போலீஸார் எண்ணிக்கை, காவல் நிலையங்கள் உபகரணங்கள் இல்லாததால் கடலோர பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

தமிழக கடற்கரையானது திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதற்கான பாதுகாப்பு, சோதனைச்சாவடிகள் உள்ளிட்டவற்றை கடலோர பாதுகாப்பு குழுமம் செய்து வருகிறது. இவர்களின் கடல் எல்லை 12 நாட்டிக்கல் மைல் ஆகும். கடலோர பகுதிகளின் பாதுகாப்பை மத்திய அரசு சார்பில் இந்திய கப்பற்படை மற்றும் கடலோர காவல் படையினர் செய்து வருகின்றனர்.

12 நாட்டிக்கல் மைலிலிருந்து 200 நாட்டிக்கல் மைல் பரப்பளவை கடலோர காவற்படையினரும், 200 நாட்டிக்கல் மைலிலிருந்து 600 நாட்டிக்கல் மைல் தொலைவை கப்பற்படையினரும் பாதுகாத்து வருகின்றனர். கடற்கரை, கடல் சார்ந்த பகுதிகளில் முக்கிய பாதுகாப்புப்பிரிவாக விளங்குவது கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகும்.

மேலும், தமிழக காவல்துறையின் கீழ் கடலோர பாதுகாப்பு குழுமம் என்ற தனிப்பிரிவு ஏடிஜிபி தலைமையில் செயல்பட்டு வருகிறது. தமிழக கடற்கரை இலங்கையை ஒட்டி அமைந்துள்ளது. சமீபத்திலிலங்கையிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வெளியானது. தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல், போதை, ஆயுதங்கள் கடத்தல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் நிலையில் உள்ள கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு போதிய படகுகள், போலீஸார் எண்ணிக்கை, காவல் நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் காவலர் பற்றாக்குறை போன்றவை உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1071 கி.மீ நீளம் கொண்ட தமிழக கடற்கரை பாதுகாப்புக்காக உள்ள தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு என 40 காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால் அதில் 27 மட்டுமே தற்போது இயங்குவதாக கூறப்படுகிறது. கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் கடலில் ரோந்து செல்வதற்காக 510 குதிரை திறன் கொண்ட 12 படகுகளும், 1,210 குதிரை திறன் கொண்ட 12 படகுகளும் என மொத்தம் 24 ரோந்து படகுகள் வாங்கப்பட்டன.

இதில் தற்போது பாதிக்குமேல் பழுதுபட்டுள்ளதால் 12 படகுகள் மட்டுமே இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20 உயர் வேக இண்டெர்செப்டர் வகை படகுகள் வழங்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை அவைகள் ஒதுக்கப்படவில்லை என்கின்றனர் இத்துறையில் உள்ள சில அதிகாரிகள்.

இது தவிர கடல் மணல் மற்றும் சாலையில் பயணிக்கும் விதமாக ஏடிவி வாகனங்கள் 24 வழங்கப்பட்டன. இவை அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, ஆனால் இவைகள் பழுதாகி கிடப்பதாகவும் சில எண்ணிக்கையில் மட்டுமே இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இதேப்போன்று கடலோர காவல் குழுமத்துக்கு சொந்தமான 40 காவல் நிலையங்களில் 27 மட்டுமே செயல்படுகிறது. இதற்கு போதிய போலீஸார் பற்றாக்குறை உள்ளதே காரணம் என்கிறார்கள். 1071 கி.மீ நீளத்தை கவர் செய்யும் காவல் நிலைங்களிலில் உள்ள மொத்த போலீஸார் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே.

இதில் கவற்பணியில் 100 சோதனைச்சாவடிகள் உள்ளன. இவைகளுக்கு ஒரு சோதனைச்சாவடிக்கு 4 போலீஸார் வேண்டும். ஆனால் பாதுகாப்புக்கு போதிய போலீஸார் இல்லாததால் இங்கெல்லாம் தமிழ்நாடு சிறப்புக்காவற்படை போலீஸாரை வைத்து சோதனைகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் 12 ரோந்து படகுகளை மட்டுமே வைத்து 1,076 கிலோ மீட்டர் நீளம் உள்ள கடற்கரையை சோதனை செய்து வருகின்றனர். இந்த படகுகள் 12 கடலில் நாட்டிகல் மைல் பரப்பை காவற்காக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள படகுகள் 5 நாட்டிக்கல் மைல் அளவுக்கு மட்டுமே செல்லக்கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சில நேரங்களில் போலீஸார் மீனவர்களின் உதவியுடன் அவர்களின் படகுகளில் கடலுக்குள் ரோந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பழுதடைந்து இருக்கும் 12 படகுகளை சரிசெய்ய தமிழக அரசு ரூ.2 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. அதை வைத்து படகுகளை சரிசெய்ய டெண்டர் விடப்பட்டு எஸ்.எஸ்.மரைன் என்ற நிறுவனம் படகுகளின் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், கடலோர காவல் குழுமத்துக்கு அதிக திறன் வாய்ந்த 20 புதிய படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். மத்திய அரசு மூலம் வழங்கப்பட வேண்டிய 20 அதிவேக இண்டர்செப்டர் படகுகள் விரைவில் வரும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீப காலமாக கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல், ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தின் முக்கியமான பாதுகாப்புள்ள துறையான கடலோர பாதுகாப்பை உறுதிச்செய்யும் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு வேண்டிய உபகரணங்கள், போலீஸார் எண்ணிக்கை, நவீன உபகரணங்கள் தேவைக்கேற்ப வழங்கப்படுவது பாதுகாப்புக்கு முக்கியமான ஒன்றாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x