Last Updated : 30 Aug, 2019 01:12 PM

 

Published : 30 Aug 2019 01:12 PM
Last Updated : 30 Aug 2019 01:12 PM

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி சம்பவத்தில் கைதான ரவுடிகளில் இருவரின் கால் உடைந்தது

மதுரை,

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் கைதான ரவுடிகளில் இருவரின் கால் எலும்பு முறிந்து சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ரவுடிகளை பிடித்தது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

பாட்னாவில் வாங்கியவை..

செய்தியாளர்கள் சந்திப்பின்போது போலீஸ் தரப்பில், "கப்பலூர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சசிக்குமார் என்ற நபரை அங்கேயே மடக்கிப் பிடித்தோம். மற்ற 4 பேர் காரில் ஏறி தப்பினர்.

மதுரை - தேனி சாலையில் கருமாத்தூர் கோட்டையூர் அருகே காரை நிறுத்துவிட்டு மற்ற ரவுடிகள் 4 பேரும் ஆட்டோவில் தப்பியதாக தகவல் வந்தது. அவர்களைப் பின் தொடர்ந்து வாலாந்தூர் அருகே மடக்கிப் பிடிக்க முயன்றோம்.

இருவர் சிக்கினர். ஆனால், தனசேகர், ராஜா தப்பி ஓடினர். அவர்கள் ஓடிய பகுதியில் வறண்ட கிணறு இருந்தது. அதில் அவர்கள் இருவரும் தவறி விழுந்தனர். இதில், தனசேகருக்கு வலது காலிலும், ராஜாவுக்கு இடது காலிலும் காயம் ஏற்பட்டது.

தனசேகர், ராஜாவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கைதான 5 பேரும் இன்று ரிமாண்ட் செய்யப்படுவார்கள்.
ரவுடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4 துப்பாக்கிகளில் இரண்டு துப்பாக்கிகள் பிஹார் மாநிலம் பாட்னாவில் வாங்கப்பட்டவை" எனத் தெரிவிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

முன்னதாக, மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் வந்த காரில் இருந்தவர்களிடம் வழக்கம்போல் ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.

ஆனால் காரில் இருந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுத்து ஊழியர்களைத் தாக்கினர். இதில் 3 ஊழியர்கள் காயமடைந்தனர்.
திடீரென்று காரில் இருந்து இறங்கிய ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு வானத்தை நோக்கிச் சுட்டார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அங்கிருந்த போலீஸ்காரர் சுரேஷ் துரிதமாக செயல்பட்டு துப்பாக்கியால் சுட்ட நபரை மட்டும் மடக்கிப் பிடித்தார். மற்ற 4 பேரும் தப்பி ஓடினர். பிடிபட்டவர் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி சசிக்குமார் (28) எனத் தெரியவந்தது. பின்னர் தப்பி ஓடிய 4 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x