Published : 24 Aug 2019 06:34 PM
Last Updated : 24 Aug 2019 06:34 PM

சென்னை மென்பொறியாளர் கைது: ஸ்டார் ஓட்டலில் வேலை என மோசடி; 16 மாநிலங்களில் 600 இளம்பெண்களிடம் ஆபாசபடம், காணொலி எடுத்து மிரட்டல்

ஸ்டார் ஓட்டல்களில் முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு பெண்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறி இளம் பெண்களின் நிர்வாணப்படம் மற்றும் காணொலிகளை எடுத்து மிரட்டிய சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரை சைபராபாத் சைபர்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சைபராபாத் சைபர் பிரிவு போலீஸாருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணமான 29 வயது பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு ஸ்டார் ஹோட்டலில் வேலை தருவதாக இண்டர்வியூ நடத்தியபின் அதன் எச்.ஆர் வாட்ஸ் அப் காலில் தொடர்புக்கொண்டு நிறுவனத்துக்கு தங்களின் முழு உடல் தெரியும் வண்ணம் ஆடையில்லா புகைப்படம் தேவை. அதை பல்வேறு கோணங்களில் எடுத்து அனுப்புங்கள் என தெரிவித்ததன்பேரில் அனுப்பியதாகவும், தற்போது அதை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சைபராபாத் உதவி கமிஷனர் ரவி தலைமையில், சைபர் பிரிவு போலீஸார் நடத்திய நீண்ட தேடுதல் வேட்டையில் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கிளமெண்ட் ராஜ் செழியன் (எ) பிரதீப்(33) என்பவர் சிக்கினார். சென்னை வந்து அவரை கைது செய்தது சைபராபாத் போலீஸ்.

அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான திடுக்கிடும் விஷயங்கள் கிடைத்தது. அவரது லாப்டாப், ஹார்ட் டிஸ்க், ஏராளமான சிம் கார்டுகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். அதில் 600-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் நிர்வாணப்படங்களும், வீடியோ பதிவுகளும் தனியாக ஒரு போல்டரில் பாஸ்வர்ட் போட்டு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் செழியன் பல உண்மைகளை கக்கினார். திறமையான மென்பொறியாளரான தனக்கு நல்ல வேலை கை நிறைய சம்பளம், தன்னைப்போன்றே வேலைக்குச் செல்லும் மனைவி என சந்தோஷமான வாழ்க்கை அமைந்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கையில் அனைத்தும் எளிதாக கிடைத்ததால் சலிப்பு தட்டியது.

அதற்கு ஏற்றாற்போல் மனைவிக்கு பகல் ஷிப்ட், தனக்கு இரவு ஷிப்ட். இதனால் இருவரும் வாரத்தில் ஒருநாள் சந்தித்தால் பெரிய விஷயம். பகல் முழுதும் தூக்கத்தில் கழியும், மீதி நேரம் பொழுதே போகாது, அப்போது வேலை ஏதாவது செய்யலாமா என ஆன்லைனில் வேலைக்கான தளங்களை பார்த்தேன். என்னைப்போலவே பலரும் வேலைக்கேட்டு பதிவு செய்திருப்பதை பார்த்தேன்.

அதில் பல அழகான பெண்களின் புகைப்படங்களைப்பார்த்தேன். அப்போதுதான் அந்த விபரீத எண்ணம் தோன்றியது. அந்தப்பெண்களின் செல்போன் எண்களை சேகரித்து மிகப்பெரும் வேலை வாய்ப்பு நிறுவன எம்டி போல் பேசினேன். முதற்கட்ட இண்டர்வியூ முடித்துவிட்டதாகவும் அடுத்து எங்கள் நிறுவன எச்.ஆர் மேனேஜர் பேசுவார் என்று போனை வைத்துவிடுவேன். இதற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணை பயன்படுத்தினேன்.

அதன்பின் வாட்ஸ் அப் காலில் எச்.ஆர் மேனேஜர்போல் பேசி நீங்கள் செலக்ட் ஆகிவிட்டீர்கள். முன்னணி ஜாப். பலரையும் சந்தித்து பேசும் ஒரு வேலை, நல்ல சம்பளம் என்று கூறுவேன்.

பின்னர் நீங்கள் அந்த வேலைக்கு தகுதியானவர்தானா? என உங்கள் உடலின் அமைப்பை எங்கள் நிறுவனம் ஆய்வு செய்யவேண்டும் ஆகவே ஆடை அணியாமல் வெவ்வேறு கோணங்களில் எடுத்து அனுப்புங்கள் என்று கூறுவேன்.

அவர்கள் கோபப்பட்டால் இணைப்பைத் துண்டித்துவிடுவேன். வாட்ஸ் அப் கால் என்பதால் புகாரும் அளிக்க முடியாது. இதற்காக தனியாக ஒரு எண்ணுடன் செல்போனை பயன்படுத்தினேன். ஒப்புக்கொள்பவர்கள் புகைப்படத்தை அனுப்புவார்கள்.

அடுத்தக்கட்டமாக வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி எங்கள் நிறுவன அதிகாரிகள் சில தகவலுக்காக உங்கள் ஆடையற்ற உடலை காண நினைக்கிறார்கள், இது வாட்ஸ் அப் வீடியோ கால் ஆகவே ரெக்கார்ட் ஆகாது என்று சொல்வேன்.

ஏற்கெனவே ஆடையற்ற படத்தை அனுப்பிய நிலையில் மறுக்க முடியாமல் ஆடையற்ற நிலையில் நிற்பார்கள். அதை விசேஷ சாஃப்ட்வேர் மூலமாக பதிவு செய்து விடுவேன். ஆரம்பத்தில் ஜாலிக்காக எடுத்தேன். பின்னர் அதை வைத்து மிரட்டி பணம் கறந்தேன்.

இவ்வாறு நான் கடந்த சில வருடங்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உட்பட 16 மாநில பெண்களை ஏமாற்றி 600-க்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளேன். தமிழகத்தில் மட்டும் குறைவாக ஏமாற்றியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அவரை கைது செய்த சைபராபாத் போலீஸார், அவரிடம் கைப்பற்றப்பட்ட புகைப்படங்கள், காணொலிகள், கேமராக்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பாரன்சிக் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். செழியன் அதிக அளவில் ஏமாற்றியது ஆந்திர பெண்களைத்தான். சுமார் 60 பேரை அவர் ஏமாற்றியுள்ளார் என சைபராபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x