Published : 24 Aug 2019 03:12 PM
Last Updated : 24 Aug 2019 03:12 PM
திருச்சி வங்கியில் கவனத்தை திசைத்திருப்பி ரூ.16 லட்சம் ஏடிஎம் பணத்தை திருடிச் சென்ற இளைஞர் பணப்பையுடன் ஆட்டோவில் பயணிக்க, அவரை சாமர்த்தியமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிகிறது.
திருச்சி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெருவில் சிட்டி யூனியன் வங்கி கிளை உள்ளது. கடந்த 20-ம் தேதி இந்த வங்கியிலிருந்து அருகிலுள்ள முசிறி, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப தனியார் ஏஜன்சி அமைப்பு பணத்தை பெற்று பைகளில் நிரப்பி வைத்துக்கொண்டிருந்தது.
ஊழியர்கள் சரவணன், அருண் ஆகிய இருவரும் வங்கியில் பணத்தைபெற்று பைகளில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கட்டுகளை எண்ணி ரூ.16 லட்சத்தை பெரிய பையில் வைத்தப்பின் , மேற்கொண்டு ரூ.18 லட்சம் பணத்தை மற்றொரு பையில் அடுக்கி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நேரத்தில் அவர்கள் கவனம் மற்றொரு பையில் பணத்தை கட்டும் வேலையில் இருக்க அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரூ.16 லட்சம் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். மற்றொரு பையை கட்டிவிட்டு ரூ.16 லட்சம் உள்ள பணப்பையை பார்த்தப்போது அது இல்லாததை கண்டு திடுக்கிட்ட அவர்கள் வங்கி முழுதும் தேடியும் கிடைக்காததால் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்க அவர்கள் கோட்டை காவல் நிலைய போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து வங்கியில் வந்து விசாரணை நடத்தினர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் கடந்த மூன்று நாட்களாக போலீஸார் திருடனை தேடிவந்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அளவுக்கதிகமான போதையில், பெரிய பேக்குடன் வந்த இளைஞர் ஒருவர், அங்கு சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்த முருகையாவிடம் தனக்கு தங்குவதற்கு ஒரு விடுதி வேண்டும் அழைத்துச் செல்ல முடியுமா என கேட்டுள்ளார்.
அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகே இருந்த தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார் முருகையா, அந்த தங்கும் விடுதியில் அந்த நபர் போதையில் இருந்ததால் தங்க இடம் தர முடியாது என மறுத்துள்ளனர். நான் ஒன்றும் மோசமான ஆள் இல்லை இதோபார் என் அடையாள அட்டை என அந்த இளைஞர் தனது பேக்கை திறந்து அடையாள அட்டையை எடுத்து காட்டியுள்ளார்.
அடையாள அட்டையை எடுக்க பேக்கை திறந்தபோது அதில் கட்டுக்கட்டாக 100, 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைப்பார்த்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் முருகையா. அந்த இளைஞரின் தோற்றத்திற்கும் இவ்வளவு பணத்தை கட்டுக்கட்டாக பேக்கில் வைத்திருப்பதற்கும் சம்பந்தமில்லையே, இவ்வளவு பணம் வைத்திருப்பவன் இப்படியா மதுபோதையில் இருப்பான் என சந்தேகமடைந்துள்ளார் முருகையா.
இதையடுத்து இங்கு அறை வேண்டாம் நான் வேறு ஒரு நல்ல விடுதிக்கு அழைத்துச் செல்கிறேன் என அந்த இளைஞரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார் முருகையா. ஏதாவது சாதாரண தெரு வழியாக கூட்டிட்டுப்போ, முக்கிய சாலைகளில் போலீஸார் வாகனச் சோதனை இருக்கிறது என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இருந்தால் நமக்கென்ன சார், நாம என்ன தப்பு செய்தோம் என முருகைய்யா கேட்க, பையில் வீடுவிற்ற பணம் இருக்கு தேவையில்லாமல் பதில் சொல்லணும் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார். போலீஸ் இருக்கும் பக்கம் போகவேண்டாம் என்று கூறியதால் சந்தேகமடைந்த முருகையா தான் இரண்டு நாட்களுக்குமுன் திருச்சி வங்கியில் 16 லட்ச ரூபாய் திருடு போனது குறித்து படித்தது ஞாபகத்திற்கு வர, நேராக பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஆட்டோவை கொண்டுபோய் நிறுத்தியுள்ளார்.
போலீஸார் என்ன விஷயம் என்று கேட்க கட்டுக்கட்டாக பணம் வைத்துள்ளார், போதையில் இருக்கிறார், சந்தேகமாக இருந்ததால் இங்கே அழைத்து வந்துவிட்டேன் என ஆட்டோ ஓட்டுனர் முருகையா கூற போலீஸார் அந்த போதை இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர்.
பையில் உள்ள பணம் தனது வீட்டை விற்று கொண்டுவந்தப்பணம் என்று கூற எங்கே உள்ள வீடு யாரிடம் விற்றாய், எங்கு கொண்டு போகிறாய் என போலீஸார் அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவர் திருதிருவென விழித்துள்ளார். பின்னர் போலீஸார் விசாரிக்கும் வகையில் விசாரிக்க வங்கியில் 16 லட்ச ரூபாய் பேக்கை திருடிக்கொண்டு வந்த நபர்தான் நான் என ஒப்புக்கொண்டார் அந்த இளைஞர்.
தீவிரவாதிகள் ஊடுருவல் காரணமாக போலீஸ் பாதுகாப்பு, வாகன சோதனை அதிகம் இருந்ததால் தான் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் மது அருந்திவிட்டு எங்காவது அறை எடுத்து தங்கிவிடலாம் அனைத்து பரபரப்பும் அடங்கியப்பின் எங்காவது தப்பிச் சென்று விடலாம் என்று ஆட்டோவில் ஏறினேன், அவர் இங்கு கொண்டு வந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் திருச்சி பாலக்கரை, அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரியவந்தது. பணம் திருச்சி வங்கியில் திருடப்பட்டது என்பது தெரிய வந்ததும் பெரம்பலூர் நகர போலீசார் திருச்சி போலீசாரிடம் பணத்துடன் ஸ்டீபனை ஒப்படைத்தனர். ஸ்டீபனிடம் வங்கியில் அவர் திருடிய 16 லட்சத்தில் ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு போலீஸாரிடம் அந்த இளைஞரை ஒப்படைக்கவில்லை என்றால் அவர் வெளிமாநிலம் தப்பிச் சென்றிருக்கலாம். வங்கிப்பணமும் மீட்கப்பட்டிருக்காது. அல்லது ஆட்டோ ஓட்டுனர் இளைஞரை மிரட்டி சில லட்சங்களை பெற்றுக்கொண்டு விடுவித்திருந்தாலும் அவர் சிக்கியிருக்க வாய்ப்பில்லை.
நேர்மையாக சமூக உணர்வுடனும், சம்யோசித்த புத்தியுடனும் செயல்பட்டு திருடனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் முருகையாவை, மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது செயலுக்கு நேரிலும், சமுக வளைதளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT