Published : 21 Aug 2019 07:07 PM
Last Updated : 21 Aug 2019 07:07 PM

சென்னையில் அமலானது புதிய அபராதம்?- மதுபோதையில் வாகனம் ஓட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் கட்டிய நபர்

மத்திய அரசின் புதிய வாகனச் சட்டம் உயர்த்தப்பட்ட அபராதம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர் ஒருவர் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்டியது வைரலாகியுள்ளது.

மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு சட்டமாகியுள்ளது. புதிய அபராதமுறை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலாகும் என மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதிய அபராதம் 10 மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்த அபராதம் கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே போலீஸார் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில் சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கிய வாகன ஓட்டி சந்தோஷ் என்பவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 10,000 ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளார். அவர் அபராதம் கட்டிய ரசீதை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட தற்போது அது வைரலாகியுள்ளது. தற்போது புதிய அபராதம் நடைமுறைக்கு வந்துவிட்டதா? என்கிற குழப்பமும் வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவது சாதாரணமாக உள்ள நிலையில் அதற்கான அபராதம் ரூ.10 ஆயிரம் என்பது எத்தனை வாகன ஓட்டிகளுக்கு தெரியும். போலீஸார் திருத்தப்பட்ட அபராதம் குறித்து விழிப்புணர்வு பேனர்களை ஆங்காங்கே வைக்கவேண்டும், அதை பார்க்கும்போது சரியாக நடக்கவேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எண்ணம் வரும், விழிப்புணர்வும் உண்டாகும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல், ஹெல்மெட், மது அருந்தி விட்டு வாகனம் இயக்குதல், சீட்பெல்ட் அணியாமல் கார் இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் கடும் அபராதங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் ஓவர் ஸ்பீட் பிரிவிலும் கடும் தண்டனைகள் அபராதங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய அபராதம் செப்.1 முதல் அமலாகும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் அதற்கான மாநில அரசு ஆணை பிறப்பித்து போலீஸார் அது குறித்த வழிமுறைகளை ஏற்படுத்திய பின்னரே அபராதம் நடைமுறைக்கு வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

சில விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும், இனி சட்டமானப்பின் வரப்போகும் அபராதமும் ஒரு பார்வை:

* ஹெல்மெட் இல்லாமல் (without helmet)வாகனம் ஓட்டினால் முன்பு அபராதம் ரூ 100 இனி- ரூ 1000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.

* குடித்துவிட்டு வாகனம் (drunken drive)ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.2000 இனி- ரூ.10000

* சாலை விதிகளை பின்பற்றாமல் (traffic violation)வாகனம் ஓட்டினால் முன்பு ரூ. 100 இனி- ரூ.500

* ஓட்டுனர் உரிமம் இல்லாமல் (without licence) வண்டி ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.500 இனி- ரூ.5000

* ஓட்டுனர் உரிமம் தகுதி இழப்பு (licence suspend) செய்யப்பட்டிருக்கும் பொழுது வண்டி ஓட்டினால் முன்பு அபராதம் ரூ.500 இனி- ரூ.10,000

* இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தால் (without insurance) முன்பு அபராதம் ரூ.1000 இனி- ரூ. 2000

* ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வண்டி ஓட்டினால் (rash driving)முன்பு அபராதம் ரூ. 1000 இப்பொழுது ரூ. 5000

* அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வண்டி ஓட்டினால் (over speed) முன்பு அபராதம் ரூ. 500 இப்பொழுது ரூ. 5000

* இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் (triples) சென்றால் முன்பு அபராதம் ரூ.100 இனி-ரூ 2000 அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் ரத்து.

இதில் புதிதாக சில சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, அவை:

* ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறாக வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதமாக விதிக்கப்படும்.

* 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் அவர்களின் பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது ரூ. 25,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். சிறார் மீது அதற்குரிய வழக்கு பாயும், வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கோல்டன் அவர் எனப்படும் அந்த நேரத்துக்கு முன்னுரிமை அளித்து எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் உயிரிழப்பவர்களுக்கான இன்ஷுரன்ஸ் தொகையும் அதிகரிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x