Last Updated : 16 Aug, 2019 05:50 PM

 

Published : 16 Aug 2019 05:50 PM
Last Updated : 16 Aug 2019 05:50 PM

வண்டியூர் சந்திப்பில் அதிகரிக்கும் விபத்துகள்; அச்சத்தில் மக்கள்: 'சிக்னல்' அமைக்கப்படுமா ?

மதுரை மாட்டுதாவணி- திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் வண்டியூர் சந்திப்பில் அதிகரிக்கும் விபத்துக்களைத் தடுக்க, ‘சிக்னல்’ அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை- கப்பலூர் வரை 28 கி. மீ., தூரத்திற்கு ஏற்கனவே எஞ்சிய நான்குவழிச்சாலை பணி சமீபத்தில் முடிந்தது. தற்போது, அந்த ரோட்டில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் ரோட்டிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்களால் பாண்டிக்கோயில் - விரகனூர் சுற்றுச்சாலை வரை காலை, மாலையில் வாகன நெருக்கடி கூடியுள்ளது.

மேலும் அண்ணாநகர், கேகே.நகர் மற்றும் தெப்பக்குளம், வண்டியூர் பகுதியில் இருந்து நான்கு வழிச்சாலையை அடையும் வாகனங் களும் அதிகரிப்பதால் பாண்டிக்கோயில், விரனூர் சுற்றுச்சாலை சந்திப்பை போன்று அதே ரோட்டில் வண்டியூர் - ராணிமங்கம்மாள் ரோடு சந்திப்பும் விழிபிதுங்கிறது. வண்டியூர், பாண்டியன்கோட்டை ரோடு என, நான்கு முனை சந்திப்பு உருவாகியுள்ளது.

வாகனப் பெருக்கத்தால் போக்குவரத்து சிக்னல் இன்றி காலை, மாலையில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இங்கு சில தனியார் பேருந்துகளும் நிறுத்தி ஆட்களை ஏற்றி, இறக்குகின்றனர்.

நான்கு ரோடுகளிலும் இருந்தும் ஒரே நேரத்தில் வாகனங்கள் வருவ தால் மிகுந்த அச்சம் உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடந்தேறுகின்றன. கடந்த வாரம் பைக்கில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளிக் கூடத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்ற பெண் ஒருவரும், நேற்று வண்டியூரைச் சேர்ந்த சேகர் என்ற காவலாளி என, விபத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை 20க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. அங்குள்ள புறக்காவல் நிலைய போலீஸார் சந்திப்பை கவனிப்பதில்லை. சந்திப்பு அருகில் வாகனங்கள் மெது வாக செல்வதற்கு இரும்பு தடுப்புகள் வைத்திருந்தாலும், வாகன ஓட்டிகள் பொருட்படுத்துவதில்லை. வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் மக்கள் உயிரை கையில் பிடித்தபடி, கடக்கவேண்டியுள்ளது. உயிரிழப்பு தடுக்க, சந்திப்பில் சிக்னல் அமைக்கவேண்டும். இல்லையெனில் போக்குவரத்து போலீஸாரை நிறுத்தி வாகனங்களை சீரமைக்கலாம் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டியூர் சரவணக்குமார் கூறுகையில், ‘‘ இருவழி சாலையாக இருந்தபோது, வாகன அதிகரிப்பில்லை. நான்கு வழிச்சாலை என்பதாலும், வண்டியூர் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்துள்ளதாலும் அந்த சந்திப்பில் போக்கு வரத்து நெருக்கடி தவிர்க்க முடியவில்லை. பாண்டிகோயிலை தாண்டி சாலையின் இருபுற மும் பள்ளி, குடியிருப்புகளும் அதிகரித்துள்ளது. அந்த இடத்தில் சிக்னல் அமைக்கவேண்டும். இல்லையெனில் வண்டியூர், பாண்டிகோயில் சந்திப்பு இடையே சர்வீஸ் ரோடு அமைக்கவேண்டும், என்றார்.

போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ‘‘ சந்திப்பு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைத்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கிறோம். சிக்னல் அமைப்பது பற்றி முடிவெடுக்கப்படும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x