Published : 13 Aug 2019 03:05 PM
Last Updated : 13 Aug 2019 03:05 PM
சென்னை,
அத்திவரதர் தரிசன பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் ஆய்வாளரை, பொதுவெளியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திட்டிய விவகாரத்தை தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.
அத்திவரதர் 40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும் நிகழ்வு கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி அன்று தொடங்கியது. 48 நாட்கள் நடக்கும் நிகழ்வில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் வரை குவிவதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் மிகுந்த சிரமப்பட்டு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு உதவும் விதம் ஆகியவை பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. பொதுமக்கள் தரிசிக்க ஒரு வழியும், விஐபிக்கள் தரிசிக்க மற்ற வழியும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இதுவரை 70 லட்சம் பேர் அத்தி வரதரைத் தரிசித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க முடிந்தது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, இந்நிலையில் கடந்தவாரம் காணொலிக் காட்சி ஒன்று வைரலானது. அதில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளரைக் கடுமையாக ஒருமையில் திட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இது காவலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் இந்த நிகழ்வு விமர்சிக்கப்பட்டது. ஊடகங்களிலும் இதுகுறித்த செய்தி வெளியானது. இதனால் நேற்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து 2 வாரங்களில் தகுந்த விளக்கம் அளிக்க தலைமைச் செயலர், காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளதாவது:
''கடந்த 9-ம் தேதி நடந்த விவகாரத்தை 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* அத்திவரதர் பாதுகாப்புப் பணியில் மற்ற காவலர்களுடன் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, தரக்குறைவாகவும், மிரட்டும் வகையிலும், கண்டித்தது மனித உரிமை மீறல் அல்லவா?
* உணவு, தண்ணீர், தங்குமிடம் வசதிகளைப் பாராமல் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஒட்டுமொத்த காவலர்களை மாவட்ட ஆட்சியரின் வார்த்தைகள் காயப்படுத்தியிருக்கும் அல்லவா?
* மீடியாக்களில் வெளியான மேற்கண்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆட்சியர் மீது தலைமைச் செயலர் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்த விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும்.
* தமிழ்நாடு தலைமைச் செயலர், சட்டம் ஒழுங்கு டிஜிபி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இதுகுறித்த விரிவான விளக்கத்தை இந்த நோட்டீஸ் அளித்த 2 வார காலத்திற்குள் தவறாமல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும்.
* இதுகுறித்து அறிக்கை பெற்ற 2 வார காலத்திற்குள் மனித உரிமை ஆணையம் அடுத்தக்கட்டத்தைப் பற்றி பரிசீலிக்கும். ஆகவே தவறாமல் 2 வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான தகுந்த நடவடிக்கையை ஆணையம் எடுக்க நேரிடும்''.
இவ்வாறு அந்த நோட்டீஸுல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் தலைமைச் செயலர், சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT