Published : 02 Aug 2019 10:58 AM
Last Updated : 02 Aug 2019 10:58 AM
மதுரை
மதுரை எஸ்எஸ்.காலனி பார்த்தசாரதி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்தவர் கார்த்திகேயன்(42). பழைய இரும்பு வியாபாாி. இவரது சொந்த ஊர் கோவில்பாப்பாகுடி. இவரது மனைவி பாரதி(37). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களது ஒரே மகன் சபா(14). மனநிலை பாதிக்கப்பட்டவர். பாரதியும் சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். மனைவி, மகனை கார்த்திகேயன் கவனித்து வந்தார். பாரதிக்கு சில மாதங்களாக உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. கண் பார்வையும் தெரியாமல் போனது.
இந்நிலையில் நேற்று 1-ம் தேதி என்பதால் அடுக்குமாடி குடியிடுப்பு பாதுகாவலர் சம்பளம் வாங்க கார்த்திகேயன் வீட்டுக்குச் சென்றார். அப்போது கதவு திறந் திருந்தது. அழைப்பு மணி அடித்தும் அவர் வரவில்லை. சந்தேகமடைந்த பாதுகாவலர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கார்த்திகேயன் தூக்கில் பிணமாகத் தொங்கினார். மனைவியும், மகனும் அறையில் இறந்து கிடந்தனர். இதை அறிந்த எஸ்எஸ்.காலனி போலீஸார் மற்றும் துணை ஆணையர் சசிமோகன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கார்த்திகேயன் எழுதிய 15 பக்கங்கள் கொண்ட உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. இது குறித்து போலீஸார் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கார்த்திகேயனின் மனைவி பாரதி வியாழக்கிழமை அதிகாலையில் இறந்திருக்கலாம். இதனால், மனமுடைந்த கார்த்திகேயன், மனநிலை பாதிக்கப்பட்ட மகனைக் கொன்று தற்கொலை செய்திருக்கலாம். இருப்பினும் கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT